சென்னை – நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறைகள் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றதால், விமானம் இன்று காலை சென்னையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
கோலாலம்பூரில் இன்று காலை தரையிறங்க வேண்டிய மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 19, சென்னையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது குறித்து, மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விமானத்தின் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு பயணித்த எம்எச் 19 விமானம், சென்னையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், எம்எச் 17 விமானம், ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு பயணிக்கையில் தான் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் போராளிகளின் ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தில் ஏவுகணை வீசி வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 298 பேர் பரிதாபமாகப் பலியாகினர்.