கோலாலம்பூர் – சியாவுமி நிறுவனம் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் தனது புதிய தயாரிப்பாக மடிக்கணினியை (Laptop) வெளியிட திட்டமிட்டுள்ளது. இது குறித்து சியாவுமி நிர்வாகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் கூறுகையில், சியாவுமியின் இந்த புதிய திட்டத்தால் ஆப்பிள் நிறுவனத்திற்கும், லெனோவா நிறுவனத்திற்கும் கடும் நெருக்கடி காத்திருப்பதாகக் கூறியுள்ளனர்.
மடிக்கணினி தயாரிப்பு தொடர்பாக பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வரும் சியாவுமி, ‘நினைவக சில்லுகளுக்காக’ (Memory Chips) சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் முக்கிய ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சியாவுமி வெளியிட இருக்கும் மடிக்கணினி, ஆப்பிளின் ‘மேக்புக் ஏர்’ (MacBook Air) மற்றும் லெனொவாவின் ‘திங்க்பேட்’ (ThinkPad) கருவிகளுக்கு கடும் போட்டி அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட இருப்பதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன. சியாவுமியின் தனிச்சிறப்பே, மலிவு விலையில் தரமான தயாரிப்புகளை கொடுப்பது தான். மடிக்கணினியிலும் அது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே திறன்பேசிகள் வர்த்தகத்தில் சீனா மற்றும் இந்திய சந்தைகளில், ஆப்பிள், சாம்சுங் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளிய சியாவுமி, தனது அடுத்த இலக்கை தற்போதே நிர்ணயித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.