பெர்ன் – 1எம்டிபி தொடர்பிலான குற்றவியல் விசாரணை நடவடிக்கையை சுவிட்சர்லாந்து அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கியுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், சுவிஸ் அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1எம்டிபி விவகாரத்தில் முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் கணக்குகளில் இருக்கும் பல மில்லியன் டாலர்கள் நிதியை, தாங்கள் முடக்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுவிட்சர்லாந்தின் அட்டர்னி ஜெனரல் அலுவலக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “சுவிஸ் வங்கிக் கணக்குகளில், சந்தேகத்தின் பேரில் முடக்கப்பட்டுள்ள நிதியின் மதிப்பு பல மில்லியன் டாலர்களைத் தாண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “தற்போதய நிலையில் அட்டர்னி ஜெனரல் அலுவலகம், கிடைத்துள்ள ஆதாரங்களை சேகரிப்பதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.