பிரசிலியா, ஜூலை 1 – சீனாவின் திறன்பேசிகள் தயாரிப்பு நிறுவனமான சியாவுமி, ஆசியா அல்லாமல் முதல் முறையாகப் பிரேசிலில் தனது திறன்பேசிகள் தயாரிப்பினைத் தொடங்கி உள்ளது.
ஆசியாவில் மிகக் குறுகிய காலத்தில் ஆப்பிள், சாம்சுங் போன்ற நிறுவனங்களுக்குக் கடும் போட்டி அளித்து வந்த சியாவுமி தனது வர்த்தகத்தை ஆசியாவைத் தாண்டி பிற நாடுகளுக்கும் கொண்டு செல்லப் பல்வேறு முயற்சிகளைக் கடந்த சில மாதங்களாகவே எடுத்து வந்தது. அந்த முயற்சிகளின் முதற்கட்டமாக, பிரேசிலில் தனது வர்த்தகத்தினைச் சமீபத்தில் தொடங்கி உள்ளது.
இது குறித்துச் சியாவுமியின் துணைத் தலைவர், ஹுகோ பெர்ரா கூறுகையில், “பிரேசிலைத் தாண்டி எங்களின் அடுத்த இலக்கு மெக்ஸிகோ மற்றும் கொலம்பியா ஆகிய பகுதிகளாகும். இந்தமுன்னேற்றம் எங்கள் திறன்பேசிகளின் தரத்திற்கு கிடைத்துள்ளது என்பதைப் பெருமையுடன் நாங்கள் கூறிக் கொள்கிறோம். எங்களின் வர்த்தகம் நாளுக்கு நாள் பெருகி வருவதற்கு நாங்கள் குறி வைக்கும் வர்த்தகச் சந்தைகள் தான் காரணம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது, பிரேசிலில் ரெட்மி 2 திறன்பேசிகளை 160 டாலர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கும் சியாவுமி, எதிர்காலத்தில் அடுத்தடுத்த திறன்பேசிகளை விற்பனை செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
சியாவுமி, இந்தியா, சீனாவைத் தாண்டி தங்கள் அடுத்த இலக்காக பிரேசிலைக் குறி வைத்துள்ளதற்கு மிக முக்கியக் காரணம், அங்கு மக்கள் தற்போது தான் தங்கள் சாதாரண செல்பேசிகளைத் திறன்பேசிகளாக மாற்றத் தொடங்கி உள்ளனர். அங்கு கடந்த வருடம் மட்டும் திறன்பேசிகளின் விற்பனை சதவீதம் 55 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.