சென்னை, ஜூலை1- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 88.43 சதவீத வாக்குகள் பெற்று, அதாவது 1,50,722 ஓட்டுகள் பெற்று, முதல்வர் ஜெயலலிதா வரலாற்றுச் சாதனை மிக்க வெற்றிக் கனியைப் பறித்துள்ளார்.
இந்தத் தொகுதியில் தி.மு.க.,வின் ஓட்டு வங்கியாகக் கருதப்படும் 50 ஆயிரம் ஓட்டுகள், இம்முறை எங்கே சென்றன? அவை ஜெயலலிதாவிற்கே போடப்பட்டனவா? என்பது புரியாமல் திமுக தலைமை தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாகத் திமுக அறிவித்தது. ஆனால், திமுக எடுத்த முடிவைத் தொண்டர்கள் ஏற்கவில்லை என்பதைத் தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க-வுக்குப் பலமான ஓட்டு வங்கி உண்டு. 2011 சட்டசபைத் தேர்தலில், திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட சேகர்பாபு 52,522 ஓட்டுகள் பெற்றார். அடுத்து, 2014 லோக்சபா தேர்தலில், அந்தத் தொகுதியில் தி.மு.க.,வுக்கு 48,301 ஓட்டுகள் கிடைத்தன. அந்த ஓட்டுகள் அனைத்தும் தற்போது ஜெயலலிதாவிற்குச் சென்றிருப்பதையே அவர் பெற்றுள்ள வாக்குகளின் சதவீதம் காட்டுகிறது.
திமுக தொண்டர்கள் எக்காலத்திலும் மாற்று அணியில் இருப்பவர்களுக்கு ஓட்டளிக்க மாட்டார்கள் என்ற நிலை தான், கடந்த பத்து ஆண்டுகள் வரையில் இருந்தது. அந்தத் தீவிரத் தன்மை இப்போது மாறிவிட்டது.
தலைவர்களின் முடிவுகளுக்குத் தொண்டர்கள் கட்டுப்படுவதெல்லாம் மலையேறிவிட்டது. அவர்கள் என்ன முடிவெடுக்கின்றனரோ, அதன்படி செயல்படுகின்றனர்.
தி.மு.க.,வின் 50 ஆயிரம் ஓட்டுகளையும் அதிமுக தற்போது தன் பக்கம் திருப்பியிருப்பது கலைஞரையும் ஸ்டாலினையும் கலங்கவைத்துள்ளது. இதே நிலை நீடித்தால், அடுத்து வரும் பொதுத் தேர்தலிலும் திமுக தொண்டர்கள் மாற்றி ஓட்டளிக்கக் கூடும் என்ற அச்சம் தற்போது அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.