ஐதராபாத், ஆகஸ்ட்11- ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதில் உலக அளவில் மூன்றாவது இடத்திலுள்ள சீனாவைச் சேர்ந்த சியாவுமி (Xiaomi) நிறுவனம், தற்போது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் தனது கிளையைத் துவக்கியுள்ளது.
இதன்மூலம் குறைந்த மூலதனத்தில் தரமான ‘ரெட்மி 2 பிரைம்’ ஸ்மார்ட்போன்களை இந்தியாவிலேயே உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது.
இந்த ‘ரெட்மி 2 பிரைம்’ இரட்டை 4G சிம் கார்டுகள் போடும் வசதியுடன், 2GB ரேம், 16GB உள்ளடக்கச் சேமிப்பு, 2200mAh பேட்டரியும், 8MP பின் கேமராவும், 2MP முன் கேமராவுடன் ரூபாய், 6,999-க்கு விற்பனைக்கு வந்துள்ளது.
உலக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவைத் தொடர்ந்து, இந்தியாவின் ஸ்மார்ட்போன் விற்பனை உலக அளவில் இரண்டாவதாக உயரும் என்ற நம்பிக்கையில் சியாவுமி நிறுவனம் இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்து ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்க முன் வந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சீனப் பயணம் மேற்கொண்டு ‘மேக் இன் இந்தியா, மேட் இன் ஆந்திரப் பிரதேசம்’ என்ற கொள்கையில் சியாவுமி நிறுவனத்தை இந்தியாவில் முதலீடு செய்ய வைத்திருக்கிறார்.
அதனால், சியாவுமி நிறுவனம் இந்தியாவில் உருவாக்கிய முதல் ஸ்மார்ட்போனை ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டணத்தில் நேற்று வெளியிட்டு, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
.