Home இந்தியா சந்திரபாபு நாயுடு ஆந்திரா முதலமைச்சராகப் பதவியேற்றார்! மோடியும் கலந்து கொண்டார்!

சந்திரபாபு நாயுடு ஆந்திரா முதலமைச்சராகப் பதவியேற்றார்! மோடியும் கலந்து கொண்டார்!

151
0
SHARE
Ad
முதலமைச்சராகப் பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து கூறும் மோடி

அமராவதி : ஆந்திரா மாநிலத்தின் 175 சட்டமன்றத் தொகுதிகளில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி அபார சாதனை புரிந்த தெலுகு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, அம்மாநிலத்தின் முதலமைச்சராக இன்று புதன்கிழமை (ஜூன் 12) அமராவதி நகரில் பதவியேற்றார்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் கலந்து கொண்டனர்.

சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி அமைத்த நடிகர் பவன் கல்யாண், நடிகர் ரஜினிகாந்த் – லதா தம்பதியர் ஆகியோரும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர். சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரணும் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் ஆந்திராவின் தலைநகராக அமராவதி தொடரும் எனவும் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். கடந்த 5 ஆண்டுகளாக ஆந்திராவை ஆட்சி செய்த ஜெகன் மோகன் ரெட்டி அமராவதி சட்டமன்றம் இயங்கும் நிர்வாகத் தலைநகராகத் திகழும் என்றும் மேலும் இரண்டு தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் படுமோசமானத் தோல்வியைத் தழுவியதால், மீண்டும் முதலமைச்சராகியிருக்கும் சந்திரபாபு நாயுடு, தன் ஆட்சிக் காலத்தில் உருவாக்கிய அமராவதி நகரையே மீண்டும் தலைநகராக உருவாக்கவிருக்கிறார்.

ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் குப்பம் தொகுதியில் போட்டியிட்ட சந்திரபாபு நாயுடு 48,006 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.