Home இந்தியா திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்குக் கொழுப்பா? பரவும் சர்ச்சைகள்! தலையிடும் பிரபலங்கள்!

திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்குக் கொழுப்பா? பரவும் சர்ச்சைகள்! தலையிடும் பிரபலங்கள்!

265
0
SHARE
Ad

திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்திலிருந்து பிரிக்க முடியாத ஓர் அம்சம் அங்கு வழங்கப்படும் லட்டு. ‘திருப்பதிக்கே லட்டா’ என்ற வாசகம் உருவாகும் அளவுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் பிரபலம்.

அந்த லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குக் கொழுப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூற, தமிழ் நாட்டிலும், ஆந்திராவிலும், ஏன் இந்திய அளவிலும் இந்த விவகாரம் சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ஆட்சியில்  திருப்பதி லட்டுவில் விலங்குக் கொழுப்பு இருந்ததாகவும் தற்போது தனது ஆட்சியில் இதனைச் சரிசெய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம்தான் லட்டு தயாரிப்பதற்கான நெய்யை அனுப்புகிறது. விலங்குக் கொழுப்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அந்நிறுவனம் மறுத்திருக்கிறது. கடந்த ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்களில் மட்டும் தொடர்ச்சியாக தங்கள் நிறுவனம் சார்பில் இரண்டு முறை நெய் அனுப்பப்பட்டதாகவும் தற்போது நெய் அனுப்புவது நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் பல பிரபலங்களும் கருத்து கூறத் தொடங்கியிருக்கின்றனர்.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இந்த விவகாரம் குறித்து வெளியிட்ட பதிவில் இதுபோன்ற விவகாரங்கள் மீண்டும் எழாமல் இருக்க, இனி நாடு முழுவதும் உள்ள கோவில்களில் தனியே குழு ஒன்று அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சனாதன தர்மத்தை இழிவு படுத்தும் வகையில் நடக்கும் இந்த விஷயங்களை முடிவு கட்ட நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த நடிகர் பிரகாஷ் ராஜ், “நீங்கள் புதிய பிரச்சினைகளை கொண்டு வராதீர்கள். முதலில் இந்த செயலை செய்தது யார் என்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் பணியில் உங்கள் சிந்தனை இருக்கட்டும்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் பவன் கல்யாண் 11 நாள் விரதம் இருந்து அனைவரின் சார்பிலும் திருப்பதி வெங்கடாசலபதியிடம் இந்த விவகாரத்திற்காக பாவமன்னிப்பு கேட்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்.