* 52% அனுர குமார திசாநாயக்க
*22% சஜித் பிரேமதாசா
*19% ரணில் விக்கிரமசிங்கே
*2.71 அரியநேந்திரன் (தமிழ் பொது வேட்பாளர்)
கொழும்பு : தேசிய மக்கள் சக்தி (NPP) வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க எதிர்பார்த்தபடி, இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.
நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற்ற இலங்கை அதிபருக்கான தேர்தலில் 52% வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
திசாநாயக்கவின் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (JVP) என்பிபி (NPP) என்னும் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் முக்கிய கட்சியாகும்.
இதன் மூலம் இலங்கை அரசியலில் புதிய மாற்றம் ஏற்பட்டிருப்பதோடு, புதிய எதிர்பார்ப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.
இலங்கை அதிபர் தேர்தல் 39 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் முக்கியமாக 3 அல்லது 4 வேட்பாளர்களிடையேதான் கடுமையான போட்டி நிலவியது.
நடப்பு அதிபர் ரணில் விக்கிரமசிங்க அதிபர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டார்.
2022-இல் நடந்த மக்கள் எழுச்சிக்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும். அந்த எழுச்சியினால் அப்போதைய அதிபர் கோத்தாபாய ராஜபக்சேயை பதவி விலகி நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.
மற்ற முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேயின் மகன் நாமல் ராஜபக்சே மோசமான முறையில் தோல்வியைத் தழுவியுள்ளார். தமிழ் மக்களின் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட அரியநேந்திரன் 2.71% வாக்குகள் பெற்றார்.
இலங்கையில் கடைசியாக நேரடி அதிபர் தேர்தல் 2019-இல் நடைபெற்றது. அதில் எஸ்எல்பிபி (SLPP) வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்சே தனது முக்கிய எதிராளி சஜித் பிரேமதாசாவை தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றார்.
2022 இலங்கை போராட்டங்களின் மத்தியில் கோத்தாபாய 2022 ஜூலை 14-ஆம் தேதி தனது பதவியிலிருந்து விலகினார்.
இதைத் தொடர்ந்து பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க அதிக வாக்குகளைப் பெற்று 2022 ஜூலை 21 அன்று இலங்கையின் 9-வது அதிபராகப் இடைக்காலத்திற்குப் பதவியேற்றார். 2019-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தாபாயவின் 5 ஆண்டுக் காலத் தவணையின் எஞ்சிய காலகட்டத்திற்கு மட்டுமே ரணில் பதவி வகிக்க முடியும் என இலங்கை அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.
இலங்கையில் அதிபருக்கே அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. புதிய அதிபர் இலங்கை அரசியலில் பல மாற்றங்களைக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கம்யூனிச சித்தாந்தங்களின் அடிப்படையில் அவரின் கட்சி செயல்படுகிறது.