பெய்ஜிங்: மன்னராக இருந்தாலும், சாதாரண குடிமகனாக இருந்தாலும், தந்தை பாசம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். சீனாவுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருந்த நமது மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடனான சந்திப்பின்போது, அவரது மறைந்த மகன் துங்கு அப்துல் ஜலீல் குறித்து பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.
மாமன்னருடன் சீனாவுக்கு வருகை மேற்கொண்டிருந்த, வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சர் ங்கா கோர் மிங் கூறுகையில், குவாங்சோவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட மறைந்த இளவரசருக்கு சீனா உதவி செய்ததற்காக மாமன்னர் நன்றி தெரிவித்தார் என்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் ஜி ஜின்பெங்குடனான சந்திப்பின்போது, சுல்தான் இப்ராஹிம் கலங்கிய கண்களை மென்தாள் (டிஷூ) கொண்டு துடைப்பதைக் காட்டும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
இந்த சம்பவத்தை அமைச்சர் ங்கா கோர் மிங் சின் சூ டெய்லி நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 19) தொடங்கிய மன்னரின் நான்கு நாள் சீன பயணத்தின் குழுவில் அவர் இடம் பெற்றுள்ளார்.
தனது மகன் சீனாவில் மேற்கொண்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த போதிலும், பின்னர் துங்கு அப்துல் ஜலீல் பின்னர் நோயால் இறந்துவிட்டார் என்பதை விவரித்தபோது மன்னரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என ங்கா கோர் மிங் காணொலி வழி குறிப்பிட்டார்.
சந்திப்பில் கலந்து கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உட்பட அதிபர் ஜியும் சுல்தான் இப்ராஹிமின் வார்த்தைகளால் நெகிழ்ந்தனர் என்றார் அவர்.
“மன்னர் தன் மகனை மிகவும் நேசிக்கும் தந்தை என்று அவர்கள் உணர்ந்தனர்,” என்றார் அவர்.
ஜோகூர் சுல்தானின் ஆறு பிள்ளைகளில் நான்காவது பிள்ளையான துங்கு அப்துல் ஜலீல், சன் யாட்-சென் பல்கலைக்கழக இணை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஓராண்டுக்குப் பிறகு, 2015-இல் 25-வது வயதில் புற்றுநோயால் இறந்தார்.
சுல்தான் இப்ராஹிம் தனது கொள்ளுப்பாட்டி மற்றும் அவரது சீனப் பெயர் பற்றியும் ஜி-யிடம் கூறினார். அந்தக் கொள்ளுப்பாட்டி குவாங்டோங் மாகாணத்தைச் சேர்ந்தவர் என்றும் மாமன்னர் ஜி ஜின் பெங்கிடம் கூறினார் என்ற தகவலையும் ங்கா பகிர்ந்து கொண்டார்.
இதைக் கேட்டதும், சீனாவில் மாமன்னரின் கொள்ளுப்பாட்டியின் குடும்ப வரலாற்றைக் கண்டறியுமாறு ஷி தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என்று அவர் கூறினார்.
சீனாவுடனான தூதரக உறவுகளை வலுப்படுத்த, மலேசியாவுக்குத் திரும்பியதும் மாண்டரின் மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் மாமன்னர் கூறினார் என்று ங்கா குறிப்பிட்டார்.