
கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (ஜூன் 12) காலமான இயக்குநர் – கலைஞர் கே.விஜயசிங்கம் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை மலேசியக் கலைத்துறையின் மேம்பாட்டுக்காக அர்ப்பணித்தவர் என மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஞானசைமன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.
விஜயசிங்கத்தின் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் ஞானசைமன். விஜயசிங்கம் கலந்து கொள்ளும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் சைமனையும் பார்க்கலாம். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளராகவும் பின்னர் தலைவராகவும் நீண்ட காலம் பணியாற்றியவர்.

விஜயசிங்கம் தலைமையேற்றிருந்த சிவாஜி கணேசன் கலைமன்றத்தின் பொருளாளராகவும் சைமன் பணியாற்றியிருக்கிறார். விஜயசிங்கத்துடன் சுமார் 34 ஆண்டுகால நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தவர் சைமன்.
“தன் வாழ்நாளின் பெரும்பகுதியை மலேசியக் கலைத் துறைக்காக அர்ப்பணித்தவர் விஜயசிங்கம். பல திரைப்படங்களையும், தொலைக்காட்சிப் படங்களையும், தொடர்களையும் தயாரித்து இயக்கியவர். அதன் மூலம் பல கலைஞர்களுக்கு நடிப்புத் துறையிலும், சம்பந்தப்பட்ட மற்ற துறைகளிலும் வாய்ப்பளித்தவர். அவரின் மறைவு மலேசியக் கலையுலகத்திற்கு பேரிழப்பு” எனவும் சைமன் புகழாரம் சூட்டினார்.
தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் ஆதரவுடன் ‘சாணக்கிய சபதம்’ என்ற நாடகத்தை அவர் இயக்கி மேடையேற்றினார். அந்த நாடகம் நாடு முழுவதும் பல நகர்களில் அரங்கேற்றப்பட்டது. அந்த மேடை நாடகத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராக தான் பணியாற்றியதையும் சைமன் தன் இரங்கல் செய்தியில் நினைவு கூர்ந்தார்.
அரசாங்க அமைப்பான செடிக் மூலம் சிவாஜி கணேசன் கலைமன்றத்தின் சார்பில் மானியத்தைப் பெற்று அதனைக் கொண்டு நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்த கலைஞர்களுக்கு விஜயசிங்கம் பயிற்சிகளை வழங்கினார் எனவும் சைமன் தெரிவித்தார்.