சென்னை – தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் 18-ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது.
முன்பு ஜூலை 15-ஆம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடப்பதாக இருந்தது. இதை எதிர்த்து விஷால் அணி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதைத் தொடர்ந்து தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
தேர்தலை எந்தப் பிரச்னையும் இல்லாமல் நடத்துவதற்காகத் தேர்தல் பொறுப்பு அதிகாரியாக, ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனைச் சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது.
இதையடுத்து தேர்தல் நடத்துவதற்கான இடங்களை பத்மநாபன் நேரில் ஆய்வு செய்தார்.வள்ளுவர் கோட்டம், காமராஜர் அரங்கம், தனியார் மேல்நிலைப்பள்ளி, லயோலா கல்லூரி ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டன.
இறுதியில் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மேல்நிலைப்பள்ளியில் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் அடுத்த மாதம் 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் வாக்களிக்கத் தகுதியுள்ள 3 ஆயிரத்து 139 நடிகர், நடிகைகள் ஓட்டு போடுகின்றனர். தேர்தல் பற்றிய அறிவிப்பு, நடிகர் சங்கம் சார்பில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது தலைவராக உள்ள சரத்குமாரும் பொதுச்செயலாளர் ராதாரவியும் அதே பதவிக்கு மீண்டும் போட்டியிடுகின்றனர். விஷால் அணி சார்பில், தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலுக்காக இரு அணியினருமே ரஜினி,கமல் உட்பட அனைத்து முன்னணி நடிகர் நடிகைகளையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தை விஷால் அணியினரும் அவர்களைத் தொடர்ந்து சரத்குமாரும் சந்தித்து ஆதரவு கேட்டனர். அப்போது அவர் புன்னகையோடு இரு அணியினருக்குமே பார்க்கலாம் எனப் பதில் சொன்னார்.
இந்நிலையில், விஷால் அணியினருக்கு, ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
விஷால் அணியினர் தங்களது ஆதரவாளர்கள் கூட்டத்தை அடுத்த மாதம்
முதல் வாரத்தில் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் நடத்தத் திட்டமிட்டனர்.
அதற்காக நடிகர் நாசர், ராகவேந்திரா மண்டப நிர்வாகி மற்றும் ரஜினிகாந்திடம் அனுமதி கேட்டுச் சென்றார்.
“மண்டபம் தானே? தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’” என ரஜினிகாந்த் உடனே அனுமது தந்துவிட்டார்.
எனவே, ரஜினியின் முழுமையான ஆதரவு நிச்சயம் விஷால் அணியினருக்குத் தான் என நம்பப்படுகிறது.