புத்ரா ஜெயா – முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் உரிய, முறையான மருத்துவ சிகிச்சை பெற்று வருவதை உறுதி செய்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது அன்வாருக்கு 17 மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளிப்பதாகவும் அந்த அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அன்வாருக்கு சிகிச்சை அளித்து வருவதாக சுகாதார அமைச்சின் தலைமைச் செயலர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
“பல்வேறு சிகிச்சை முறைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் அக்குழுவில் உள்ளனர். உரிய, முறையான சிகிச்சை பெறுகிறார் என்பதை உறுதி செய்யவே இந்த நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்” என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
அன்வாருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் 8 மருத்துவப் பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்றும் நூர் ஹிஷாம் கூறியுள்ளார்.
“அவருக்கு (அன்வார்) எந்தவித சிகிச்சையும் மறுக்கப்படவில்லை. பிற நோயாளிகளைப் போலவே அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மறு ஆய்வு செய்யப்படுகிறது” என்று நூர் ஹிஷாம் குறிப்பிட்டுள்ளார்.
அன்வார் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கின் சாட்சிகளில் ஒருவரான சுகாதார அமைச்சின் துணைத் தலைமைச் செயலர் டத்தோ டாக்டர் ஜெயேந்திரனும் அன்வாருக்கு சிகிச்சை அளிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ளார். இதையடுத்து அக்குழுவில் இருந்து அவரை நீக்க வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில் சுகாதார அமைச்சின் மேற்கண்ட விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.