கோலாலம்பூர்- தம் மீது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வழக்கு தொடுத்தால் அதை எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாக மசீச முன்னாள் தலைவரும், முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான லிங் லியோங் சிக் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.
1எம்டிபி விவகாரம் தொடர்பில் அண்மையில் கருத்துரைத்த டாக்டர் லிங், பிரதமர் பதவியில் இருந்து நஜிப் விலக வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதனை அ டுத்து பிரதமர் நஜிப் சார்பில் அவரது வழக்கறிஞர் நிறுவனம், டாக்டர் லிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளது. தாம் தெரிவித்த கருத்துக்களை 7 நாட்களுக்குள் திரும்பப் பெறுவதுடன் மன்னிப்பும் கோர வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மன்னிப்பு கேட்க இயலாது என டாக்டர் லிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
“பிரதமருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்… என் மீது வழக்கு தொடர முடிவு செய்தீர்கள் எனில், என்னைத் தற்காத்துக் கொள்வேன். உங்களது சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன்,” என புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் லிங் குறிப்பிட்டுள்ளார்.
தாம் தெரிவித்த கருத்துக்களை மீண்டும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அவற்றை தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்கப் போவதில்லை எனக் கூறியுள்ளார்.