அங்காரா – சக்தி வாய்ந்த இரண்டு வெடிகுண்டுகள் நேற்று சனிக்கிழமை அங்காராவில் உள்ள பிரதான இரயில் நிலையத்திற்கு அருகில் வெடித்ததில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. 400க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என துருக்கிய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
ஆனால், அதே வேளையில் துருக்கியின் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் 95 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 246 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குர்திஷ் ஆதரவாளர்களைக் கொண்ட அமைதிப் பேரணிக்கு அருகில் இந்த குண்டுகள் வெடித்தன. குர்திஸ்தான் தொழிலாளர் கட்சிக்கும் துருக்கிய அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்ந்து வரும் நீண்ட கால நெருக்கடிகளைத் தணிக்கும் வகையில் குர்திஷ் மக்களுக்கு ஆதரவாக இந்த அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.
தேசிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற மூன்று வாரங்கள் இருக்கும் வேளையில் இந்த வெடிகுண்டு பயங்கரவாதம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் பலர் இன்னும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருந்து வருவதால் மரண எண்ணிக்கை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.