கோலாலம்பூர், மார்ச் 13- “தேசிய முன்னணி அரசின் வேட்பாளர் பட்டியல் தயார் நிலையில் உள்ளது ஆனால், அதில் தேவைக்கேற்ப கடைசி நேர மாற்றங்கள் செய்யப்படலாம்” என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று இரவு ‘பிரதமருடன் கலந்துரையாடல்’ என்ற டிவி 3 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்,”ஒவ்வொரு முறையும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுகிறோம், ஆனால் அதில் கடைசி நேரத்தில் சில மாற்றங்களைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம் காரணம் வெற்றிபெறக்கூடிய சிறந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கத்தில் தான்” என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், “இப்போது வெளியிடவிருக்கும் வேட்பாளர்களின் பட்டியலில் கடைசி நேர மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று நம்புகிறேன். அப்படி இருக்கும் பட்சத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்,கிட்டத்தட்ட எல்லாத் தொகுதிகளும் அடங்கிய ஒரு அடிப்படை வேட்பாளர் பட்டியல் இப்போது தயாராக உள்ளது. இதில் தேவைக்கேற்ப சில மாற்றங்கள் செய்யப்படலாம்” என்றும் நஜிப் தெரிவித்தார்.
தேசிய முன்னணி அரசால் இந்தியர்களுக்கு அதிகமான பயன்கள்
தேசிய முன்னணி அரசால் இந்திய சமுதாயத்தினர் அடையும் பயன்கள் பற்றி நஜிப் கூறுகையில், தேசிய முன்னணி அரசு இந்திய சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை கொண்டுவந்துள்ளது. இந்திய மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் அதிக இடங்கள் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
“இந்திய மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்லூரிகளில் அதிக இடங்கள் கிடைக்கும் வகையில் கடந்தவாரம் போர்ட்டிக்சனில் திட்டம் ஒன்றை வெளியிட்டேன். அத்திட்டத்தின் படி இந்திய மாணவர்கள் பலர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்ந்து பயனடைய உள்ளார்கள். மேலும் தேசிய தொழில்முனைவோர் பிரிவு பொருளாதார நிதி மற்றும் அமனா இக்தியார் மலேசியா போன்ற திட்டங்களின் மூலம் சிறு வணிகர்களுக்கு மைக்ரோ கடனுதவி என்று அழைக்கப்படும் சிறு முதலீடு, வழங்கப்படுகிறது” என்று பிரதமர் அந்த தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையைப் பணயம் வைக்க வேண்டாம்
மற்ற கட்சிகளை நம்பி மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைக்காமல் தேசிய முன்னணி அரசின் மீது நம்பிக்கை வைத்து தங்களையும், இந்த தேசத்தையும் மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லுமாறு பிரதமர் நஜிப் கேட்டுக்கொண்டுள்ளார்.