காத்மாண்டு – நேபாளத்தில், இந்திய செய்தி நிறுவனங்களின் சேனல்களுக்கு காலவரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் உள்நாட்டு விவகாரங்களில் இந்திய செய்தி நிறுவனங்கள் தலையிட்டு தேவையற்ற செய்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
நேபாள நாட்டில் சமீபத்தில் புதிய அரசியல் சாசனம் அறிவிக்கப்பட்டது. மன்னராட்சிக்கு முற்றிலும் முடிவு கட்டப்பட்டு, மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நேபாளம் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது இந்திய அரசிற்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே நேபாளத்தின் தென்பகுதியில் வாழும் மாதேசிகள் எனப்படும் பீகாரைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியினர், புதிய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தால், தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவோம் என்று கூறி கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு நடக்கும் கலவரங்களை இந்திய ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குவதாக நேபாளம் கண்டனம் தெரிவித்துள்ளது.