நியூ யார்க் – நாம் மனோஜ் பார்கவ் என்ற இந்த பெயரை அடிக்கடி கேட்டிருப்போம். யூட்யூப் காணொளிகளுக்கு இடையில் தோன்றும் விளம்பரங்களில் அடிக்கடி தோன்றுவார் இந்த மனோஜ் பார்கவ். இன்று அவரது குழுவின் கண்டுபிடிப்புகள் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
“ஏழைகள் ஏழைகளாகவே இருக்க காரணம், மின்சாரம் இல்லாததுதான்” என்பது மனோஜின் தீர்க்கமான நம்பிக்கை. அதனை உடைக்கும் முயற்சியில் இறங்கிய அவருக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. தனது தயாரிப்பினை அவர் ஏழைகளிடத்தில் சேர்த்துவிட்டால், அவரது எண்ணத்திற்கான வெற்றியும் கிடைத்துவிடும்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழில் அதிபரான மனோஜ், தனது தந்தையின் தொழிலை ஏற்று நடத்தியதன் மூலம் சேர்த்த 4 பில்லியன் அமெரிக்க டாலர்களில், 99 சதவிகிதத்தை உலகின் பல்வேறு தேவைகளுக்கான தீர்வுகளை கண்டுபிடிக்கச் செலவழிக்க இருப்பதாக அறிவித்தார். அதில் ஒன்றுதான் ’இலவச மின்சார’ திட்டம்.
அந்த திட்டத்தின் அடிப்படையில் அவரது குழு உருவாக்கியது தான் ‘ஹைபிரிட் பைசைக்கிள்’ (Hybrid Cycle). இதை ஒரு மணி நேரம் மிதித்தால், ஒரு நாளைக்கு தேவையான மின்சாரம் கிடைக்கும் என்கிறார்கள். இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று என்னவெனில், இதன் மூலம் எந்தவிதமான மாசும் ஏற்படாது என்பது தான். நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்வதால் செலவும் மிச்சம் தான்.
இது மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு பகுதிகளில் வறுமையின் காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கும் மக்களுக்கு அறிவியல் மூலம் தீர்வு காண மனோஜின் குழு இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த குழுவின் காணொளியை கீழே காண்க:
https://www.youtube.com/watch?v=_Z2IeUNw-wM