சான் பிரான்சிஸ்கோ – உலகிலேயே அதிகமானோர் பார்க்கும் – பகிர்ந்து கொள்ளும் – முதல் நிலை காணொளி வடிவ (வீடியோ) இணையத் தளமான யூ டியூப் ஆதாரபூர்வமான செய்திகளை வழங்கும் நோக்கில் தனது புதிய செய்தி அலைவரிசையைத் தொடக்குகின்றது.
யூ டியூப் தளம் கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். யூ டியூப், புதிய செய்தி அலைவரிசைக்கென 20 மில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கியுள்ளது.
இணையத் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பரப்பப்படும் பொய்யான தகவல்களை முறியடிக்கும் வகையில், அதிகாரபூர்வ, உண்மைத் தகவல்களை மக்களிடையே கொண்டு செல்ல யூ டியூப் பாடுபடும்.
உலகம் எங்கிலும் உள்ள மற்ற செய்தி பதிப்பாளர்கள் யூ டியூப் செய்திகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் அதன் பகிரும் வசதிகளின் தொழில் நுட்பங்களையும் யூ டியூப் மேம்படுத்துகிறது.
அதே வேளையில் செய்திகளை வெளியிடும் நிறுவனங்களின் தொழில் நுட்ப ஆற்றலை மேம்படுத்தும் வண்ணம் அவர்களுக்கான காணொளி தயாரிப்பு நுணுக்கங்களையும் கற்றுத் தர – பயிற்சிகள் வழங்க – யூ டியூப் தனது முதலீட்டின் ஒரு பகுதியைப் பயன்படுத்தவிருக்கிறது.
இதற்காக உலகின் பல செய்தி நிறுவனங்களுடன் யூ டியூப் இணைந்து செயலாற்றவிருக்கின்றது. அத்தகைய நிறுவனங்களில் இந்தியாவின் இந்தியா டுடே நிறுவனமும் ஒன்றாகும்.