சென்னை – ‘தெறி’ படத்தின் முக்கியமான காட்சிகளை கோவாவில் படம் பிடித்துக் கொண்டிருக்கும் இயக்குநர் அட்லீ, அந்தப் படத்தில் விஜய் கதாபாத்திரம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திற்கு வழங்கியுள்ள பேட்டியொன்றில் விளக்கியுள்ளார்.
“விஜய் ஓர் உணர்ச்சிவயப்பட்ட போலீஸ் அதிகாரியாக வருகின்றார். பலம் வாய்ந்தவராகவும், அதே வேளையில் முரட்டுத் தனம் மிக்கவராகவும் விஜய் தோன்றுகின்றார். அனைவருக்கும் இந்த போலீஸ் கதாபாத்திரம் பிடிக்கும். இந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை விஜய் நன்றாக வெளிக் கொணர்ந்திருக்கின்றார். இந்தக் கதாபாத்திரம் உங்கள் குடும்ப உறுப்பினர் என்பதுபோல உணர்வீர்கள்” என்று அட்லீ அந்தப் பேட்டியில் கூறியிருக்கின்றார்.
தெறி படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவரான எமி ஜேக்சன்
“படத்தின் கதைக்கு ஏற்ற தலைப்பு என்பதாலேயே ‘தெறி’ என்று வைத்தோம். அதற்கேற்ற படத்தின் முதல் பார்வை படக் காட்சிகளையும் வெளியிட்டிருக்கின்றோம்” என்றும் அட்லீ மேலும் கூறியிருக்கின்றார்.
படத்தின் முதல் பார்வைப் படங்களில் மூன்று வெவ்வேறு விதமான முகத் தோற்றங்களில் விஜய் தோன்றுவதால் இரண்டு அல்லது மூன்று வேடங்களில் நடிக்கின்றார் என்ற யூகங்களும் எழுந்துள்ளன.
இதுகுறித்துக் கூறிய அட்லீ, “படத்தின் கதையை நான் இப்போது கூற முடியாது, இருப்பினும் சில ஆச்சரியங்கள் இரசிகர்களுக்குக் காத்திருக்கின்றன” என்று மட்டும் தற்போதைக்குக் கூறியிருக்கின்றார்.
தெறி படத்தின் மற்றொரு கதாநாயகி சமந்தா..
படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான எமி ஜாக்சனும் போலீஸ்கார வேடத்தில்தான் வருகின்றாரா என்று கேட்டதற்கு “எனது படங்களில் கதாநாயகியை வெறும் கவர்ச்சிக்காகவும், பாடலுக்காகவும் மட்டும் பயன்படுத்த மாட்டேன். அதே போல இந்தப் படத்திலும் இரண்டு கதாநாயகிகள் எமி ஜேக்சனுக்கும், சமந்தாவுக்கும் வலுவான பாத்திரங்களை அமைத்துள்ளேன்” என்று அட்லீ பதிலளித்துள்ளார்.
“தெறி” படத்துக்கு ஹாலிவுட் பட சண்டை இயக்குநர்
படத்தின் சண்டைப் பயிற்சி இயக்குநராக திலீப் சுப்பராயன் பணியாற்றி வந்தாலும், ஹாலிவுட் சண்டைப் பயிற்சி இயக்குநர் கலோயான் வோடனிசரோவ் (Kaloyan Vodenicharov) ‘தெறி’ படத்தின் முக்கிய சண்டைக் காட்சிகளை அமைக்கவிருக்கின்றார். அதற்கான காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. படத்தின் உச்சகட்ட (கிளைமாக்ஸ்) சண்டைக்காட்சிகளில் ஹாலிவுட் சண்டைக்காட்சி நடிகர்கள் சிலரும் நடிக்கவுள்ளனராம்.
ஜிவியின் 50வது படமாக தெறி அமைகின்றது. இதில் விஜய் ஒரு பாடலும் பாடியிருக்கின்றார்.
இதற்கிடையில் படப்பிடிப்பின் இடைவேளைகளில் மனதையும் உடலையும் ஓய்வெடுத்துக் கொள்ளச் செய்யும் வகையில் விஜய்யும், இயக்குநர் அட்லீயும் பூப்பந்து (பேட்மிண்டன்) விளையாடுகின்றனராம்.
-செல்லியல் தொகுப்பு