Home Featured நாடு மோடி அறிவித்த 2ஆம் உலகப் போர் நினைவு மையம் – கம்பார் நகரில் ஏன்?

மோடி அறிவித்த 2ஆம் உலகப் போர் நினைவு மையம் – கம்பார் நகரில் ஏன்?

677
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அண்மையில் மலேசிய வருகை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மைன்ஸ் கண்காட்சி மண்டபத்தில் கடந்த நவம்பர் 22ஆம் தேதி இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றும்போது, ஒரு முக்கிய அறிவிப்பொன்றைச் செய்தார்.

narendra_modiமலேசிய அரசாங்கம் அனுமதித்தால், பேராக்கில் உள்ள கம்பார் நகரில் இரண்டாம் உலகப் போர் நினைவு மையம் ஒன்றை நிறுவுவதற்கு இந்திய அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்பதுதான் அந்த அறிவிப்பு.

இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்த இந்திய இராணுவத்தினர் நினைவாக இந்த நினைவு மையம் அமைக்கப்படும் என்றும் மோடி அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

குறிப்பாக கம்பார் நகரில் ஏன் இந்த நினைவு மையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகின்றது.

இரண்டாம் உலகப் போரின்போது, இந்திய தேசிய இராணுவம் அமைத்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜப்பானுடனும், ஜெர்மனியுடனும் கைகோர்த்து பிரிட்டிஷாரை இந்தியாவிலிருந்து விரட்ட முற்பட்டார் என்பது சரித்திரத்தின் ஒரு பக்கம்.

Perak Mapமேலே உள்ள வரைபடத்தில் கிந்தா எனக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில்தான் கம்பார் நகர் அமைந்துள்ளது…

ஆனால், அதே இரண்டாம் உலகப் போரின் சரித்திரத்தின் மற்றொரு பக்கம் என்னவென்றால், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அதிகாரத்தில் இருந்த இந்திய இராணுவத்தின் சார்பாக பல  இந்திய இராணுவத்தினர் (அந்தக் கால) மலாயா வந்து பிரிட்டிஷாருக்கு ஆதரவாக, ஜப்பானியரை எதிர்த்துப் போரிட்டு உயிர் துறந்தனர் என்பதுதான்.

அவ்வாறு, மலாயாவை ஆக்கிரமிக்க முன்னேறி வந்த ஜப்பானியரைத் தடுத்து நிறுத்துவதற்காக கம்பார் நகரில் 30 டிசம்பர் 1941 முதல் 2 ஜனவரி 1942ஆம் நாள்வரை இந்தியாவின் 11வது இராணுவப் பிரிவைச் சேர்ந்த துருப்புகளும், ஜப்பானின் 5வது படைப் பிரிவைச் சேர்ந்த துருப்புகளும் கடுமையாகப் போரிட்டனர்.

நான்கு நாட்கள் நடந்த இந்த சண்டையில் இந்திய இராணுவத்தினர் பலர் உயிரிழந்தனர். பின்னர் இந்த சம்பவம் கம்பார் யுத்தம் என சரித்திர ஆசிரியர்களால் குறிப்பிடப்பட்டது.

கோலாலம்பூரை நோக்கி முன்னேறி வந்த ஜப்பானிய இராணுவத்தினரை தடுத்து நிறுத்துவதற்காக கம்பாரில் முகாமிட்டுப் போரிட்ட இந்திய இராணுவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாகவே அந்த நகரில் நினைவு மையம் அமைக்கப்படும் என நரேந்திர மோடி அறிவித்தார் என்பதுதான் மோடி அறிவிப்பில் பின்னணியில் உள்ள தகவல்.

-இரா.முத்தரசன்