கோலாலம்பூர் – ஆர்.பி.ரவி இயக்கத்தில் சக்திவேல் வாசு கதாநாயகனாகவும், சமுத்திரக்கனி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கும் ‘தற்காப்பு’ திரைப்படத்தின் அறிமுக விழா நேற்று கோலாலம்பூர் கோல்ப் கிளப்பில் நடைபெற்றது.
மலேசியாவைச் சேர்ந்த கினெடாஸ் கோப் நிறுவனம் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் எஸ்.செல்வமுத்து மற்றும் என். மஞ்சுநாத் தயாரிக்கும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
அஸ்ட்ரோ ஷா அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ள இத்திரைப்படத்தின் அறிமுக விழாவில் அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் மூத்த துணைத் தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கலந்து கொண்டு படம் குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
மலேசியாவைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரியான டத்தோ பரமசிவம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மலேசிய காவல்துறை குறித்தும், குற்றவாளிகள் குறித்தும் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இவ்விழாவில் பேசிய வில்லன் நடிகர் பொன்னம்பலம் தனக்கும், கதாநாயகம் சக்திவேலுக்கும் இடையிலான அன்பு குறித்தும், சக்திவேலின் தந்தை இயக்குநர் பி.வாசுவைப் பற்றியும் சிலாகித்துப் பேசினார்.
கதாநாயகன் சக்தி பேசுகையில், தான் இத்திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிபதற்காக எடுத்துக் கொண்ட கடுமையான பயிற்சிகள் குறித்தும், படம் குறித்தும் நிகழ்ச்சியின் அறிவிப்பாளர்களான டிஎச்ஆர் சுரேஷ் மற்றும் ரேவதியின் கேள்விகளுக்கு சுவையான பதில்களை அளித்தார்.
இத்திரைப்படத்தில் மனித உரிமை ஆணையராக நடித்துள்ள இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி தனது அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.
தற்காப்பு திரைப்படத்தின் இயக்குநர் ரவி பேசுகையில், இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் நிச்சயம் படம் பார்ப்பவர்களை உருவ வைக்கும் அளவிற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
தற்காப்பு திரைப்படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் செல்வமுத்து பேசுகையில், இப்படத்தை தான் தயாரிக்க முன்வந்ததற்கான காரணம் அதன் வித்தியாசமான திரைக்கதை என்று தெரிவித்தார். நிச்சயமாக இத்திரைப்படம் தமிழ்ப் பட ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சி படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
இத்திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும், சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நடிகை நமீதா, நடிகர் சக்தி குறித்தும், தனது திரையுலக அனுபவங்கள் குறித்தும் சுவாரஸ்யமான விசயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
செய்தி, படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்