கோலாலம்பூர் – உலகத் தமிழ் கல்விக் கழகம் (International Tamil Academy) எதிர்வரும் 2016ஆம் ஆண்டு மே 27 முதல் மே30ஆம் தேதி வரை “வெளிநாடுகளில் தமிழ்க் கல்வி கற்பித்தல்” என்ற தலைப்பிலான மாநாடு ஒன்றை நடத்துகின்றது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் எவ்வாறு தமிழ் கற்பிக்கப்படுகின்றது, தமிழ் கற்பித்தலில் எவ்வாறு ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பைப் பரிமாறிக் கொள்ளலாம் என்ற அம்சங்கள் மையக் கருத்தாக விவாதிக்கப்படும்.
தமிழ் கற்பிப்பதில் அதற்கான வியூகங்களை எப்படிப் பரிமாறிக் கொள்வது, மற்றும் பாடத்திட்டங்கள், ஒருங்கிணைக்கப்பட்ட பாடத்திட்டமொன்றை உருவாக்கும் நடைமுறை போன்ற இலக்குகளிலும் இந்த மாநாடு கவனம் செலுத்தவிருக்கின்றது.
இந்த மாநாடு தொடர்பில், உலகம் எங்கும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களின் திறன்களை வெளிக்கொணரும் வண்ணம் பல போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன.
மின்னூல்கள், சிறுகதைகள், குறும்படங்கள் ஆகிய துறைகளில் இந்தப் போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன. இந்தப் போட்டிகளுக்காக மாணவர்களைப் பதிந்து கொள்ள வேண்டிய இறுதி நாள் 31 ஜனவரி 2016 ஆகும்.
இந்த மாநாடு தொடர்பிலான மேல் விவரங்களை www.tamilconference.org என்ற இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்பதோடு, அந்த இணையத்தளம் மூலமாகவே மாணவர்கள் போட்டிகளுக்காக பதிந்து கொள்ளலாம்.
மாநாட்டின் கருத்துகள், அணுகுமுறைகள், உத்திகள்
தாய் நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்கள் குழந்தைகள் தமிழ் கற்க வேண்டும் என்னும் சிறந்த எண்ணத்தோடு, உலகின் பல்வேறு நாடுகளில் பல அமைப்புகளை ஏற்படுத்தி, தமிழைக் கற்பித்து வருகிறார்கள்.
புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வியை மேம்படுத்தவும், எளிதாக்கவும், வழி வகைகளை ஆராய உலகத் தமிழ் கல்விக்கழகம் (முன்பு கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் என அழைக்கப்பட்டது) முதன்முதலாக 2012 இல் ஒரு மாநாட்டை சிறப்பாக நடத்தியது. உலகெங்கும் இருந்தும் பல அறிஞர்களும் கல்வியாளர்களும் பங்கேற்று, புலம்பெயர்ந்தோரிடையே தமிழ்க் கற்பித்தலில் இருக்கும் சவால்கள், நோக்குகள் மற்றும் சாத்தியங்கள் பற்றி தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.
அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த மாநாட்டை 2016 இல் நடத்த உலகத் தமிழ் கல்விக் கழகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த மாநாட்டில், தமிழ்க்கல்வி பற்றிய கருத்துகள், அணுகுமுறைகள் மற்றும் உத்திகள் பற்றி ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் ஆராய உள்ள மூன்று கருப்பொருட்களைப் பற்றிய சிறு குறிப்புகள்:
கருத்துகள்:
மொழி கற்றுக்கொள்வதில் இருக்கும் அடிப்படைத் தத்துவங்களை புரிந்து கொள்வது மொழியை கற்றுக்கொடுக்க மிகவும் இன்றியமையாதது. அவ்வகையில் மொழி கற்பதில் உள்ள வழிகள் பற்றி மொழி ஆராய்ச்சியாளர்களும் கல்வியாளர்களும் கூறும் வழிமுறைகளை ஆராய்வதே இக்கருப் பொருளின் நோக்கம்.
அணுகுமுறைகள்:
மேற்காணும் கற்கும் வழிகளை அறிந்து, அவற்றைச் செயல்படுத்த அணுக வேண்டிய வழிமுறைகளைப் பகிர்ந்து கொள்வதே இக்கருப் பொருளின் நோக்கம்.
உத்திகள்:
மேற்காணும் அணுகுமுறைகளை வகுப்பறைகளில் செயல்படுத்த உதவும் உத்திகளை அறிந்துகொள்வதும், பயிலரங்கு மூலம் பயிற்சி அளிப்பதும் இக்கருப் பொருளின் நோக்கம்.
இம்மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் பகிர்தலும், பயிலரங்குகள் மூலம் பயிற்சி அளித்தலும் மற்றும் தமிழ்ப் போட்டிகள், தமிழ்க் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் அறிஞர்களையும், புலம் பெயர்ந்து தமிழ்க்கல்வியில் சிறந்த சேவை செய்து வரும் அனைவரையும் இம்மாநாட்டில் பங்கேற்று, தமிழ் தழைக்கவும், சிறக்கவும் வேண்டியனவற்றை செய்திட அன்புடன் அழைப்பதாக மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநாடு பற்றிய விவரங்களுக்கு அணுக வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
conference@catamilacademy.org.