Home நாடு புலம் பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு : பங்கேற்க மலேசியக் குழு அமெரிக்கா பயணம்

புலம் பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு : பங்கேற்க மலேசியக் குழு அமெரிக்கா பயணம்

854
0
SHARE
Ad
சி.ம.இளந்தமிழ்-என்.எஸ்.இராஜேந்திரன் – முத்து நெடுமாறன்

கோலாலம்பூர் : அமெரிக்காவில் இயங்கிவரும் உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது புலம் பெயர் தமிழ்க் கல்வி மாநாடு (DTEC) அடுத்த வாரம், மே 26, 27, 28, 29-ஆம் நாட்களில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சாண்டா கிளாரா நகரில் நடைபெறவிருக்கிறது

புலம்பெயர்ந்த தமிழர்களுக்குத் தமிழ் கற்பிப்பதில் சிறந்து விளங்குவதற்கு, உலகத் தமிழறிஞர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதே இம்மாநாட்டின் நோக்கம் ஆகும்.
இம்மாநாட்டில் கலந்து கொண்டு பங்களிப்பதற்காக மலேசியாவில் இருந்து 20 பேர் கொண்ட கல்வியாளர் குழுவினர் எதிர்வரும் 26ஆம் நாள் அமெரிக்கா செல்லவிருக்கின்றனர்.

அமெரிக்கா வாழ் தமிழ்க் கல்வியாளர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ் கற்றல் கற்பித்தலில் மலேசியா கையாளுகின்ற புதிய முறைகள் கண்டறியப்பட்டு, இம்முறைகள் தமிழை இரண்டாம் மொழியாக கற்கும் அமெரிக்கத் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தலில் பயன்படுத்துதற்கான சாத்தியக் கூறுகளையும் விவாதிக்கும் ஆய்வுக்கட்டுரைகளை மலேசியக் கல்வியாளர்கள் வழங்க உள்ளனர்.

#TamilSchoolmychoice

மலேசியப் பேராளர் குழுவிற்குத் தலைமை ஏற்றிருக்கும் பேராசிரியர் முனைவர் டத்தோ என் எஸ் இராஜேந்திரன் கூறுகையில் “மலேசிய தமிழ் கல்வியாளர்களுக்கு ஒரு கடப்பாடு உள்ளது” என்றும் “அது தமிழ்மொழியை கற்பிக்க முயற்சி செய்யும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு தீவிரமாக உதவுதல்” என்றும் தெரிவித்தார்.

கணினி வல்லுனர் முத்து நெடுமாறன் அவர்கள் மெய்நிகர் உலகில் கற்றல் கற்பித்தல் பிறிதொரு பரிமாணத்தில் வளருவதாகவும், இதில் தமிழர்கள் பின்தங்கி விடக்கூடாது என்றும் தெரிவித்தார்.

விரிவுரையாளர் சி.ம.இளந்தமிழ், மலேசியப் பேராளர்களின் ஆய்வுக் கட்டுரை அமெரிக்கா வாழ் தமிழ் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன் விளைவிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துப் பரிமாற்றத்தை எளிதாக்க, உலகெங்கிலும் உள்ள தமிழ்க் கல்வியாளர்களுடன் கைகோப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் அதே வேளையில் மலேசியப் பேராளர்களின் பங்களிப்பு மகிழ்ச்சியை தருவதாக மாநாட்டின் தலைவி வெற்றிசெல்வி ராஜமாணிக்கம் அமெரிக்காவில் இருந்து தெரிவித்துள்ளார்.

மலேசியக் குழுவின் தலைவராக பேராசிரியர் முனைவர் டத்தோ என். எஸ். ராஜேந்திரன் அவர்களும், ஒருங்கிணைப்பாளர்களாக திரு. முத்து நெடுமாறன், சி.ம. இளந்தமிழ் ஆகியோரும் செயல்படுகின்றனர்.