Home Featured கலையுலகம் ‘ஜகாட்’ முதல் நாள் முதல் காட்சி: மலேசிய சினிமாவின் பரவசத்தை அனுபவிக்கத் தயாரா?

‘ஜகாட்’ முதல் நாள் முதல் காட்சி: மலேசிய சினிமாவின் பரவசத்தை அனுபவிக்கத் தயாரா?

278
0
SHARE

Jagatகோலாலம்பூர் – முற்றிலும் தோட்டப் புறங்களில் வசிக்கும் மலேசியர்களின் கலாச்சாரத்திலும், அவர்களின் வாழ்க்கைச் சூழலிலும் பின்னிப் பிணைந்து பயணிக்கும் ஒரு கதைக் கருவைக் கொண்டு ‘ஜகாட்’ என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சஞ்சய் பெருமாள்.

வன்முறை எங்கு தொடங்குகிறது? வன்முறை எங்கு முடிகிறது? என்பதை ஒரே குடும்பத்தில் வெவ்வேறு கதாப்பாத்திரங்களை உதாரணங்களாக மேற்கோள் காட்டி, கத்தியின்றி இரத்தமின்றி புத்தியில் உரைக்கும் படி கதை சொல்லியிருக்கிறார்.

நடிப்பு

Jagat 1அப்போய் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஹர்விந்த் குமார், தனது முகபாவணைகளாலேயே அந்தக் கதாப்பாத்திரத்தின் வலியை உணர்த்துகிறார். இத்தனைக்கும் முதல் படம் அவருக்கு. அற்புதமான நடிப்பு.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டு, அற்ப சம்பளத்தில் மரம் வெட்டி குடும்பத்தை நகர்த்தும் அப்போயின் தந்தை மணியம் கதாப்பாத்திரம்..

கையில் எடுத்த வன்முறை தன்னையே சோதித்துப் பார்த்துவிட, எதுவே வேண்டாம் என்று ஊரை விட்டே ஒதுங்கி நிற்கும் பாலா கதாப்பாத்திரம்..

குண்டர் கும்பலில் சிக்கித் தவிக்கும் மெக்சிகோ கதாப்பாத்திரம் என படத்தில் நெஞ்சைத் தொடும் கதாப்பாத்திரங்கள் ஏராளம்..

Kuben

அப்போயின் தந்தையாக குபேந்திரன் மிகச் சரியாகப் பொருந்துகிறார். நடிப்பில் அத்தனை முதிர்ச்சி. நூழிலையில் தனது மகனின் நன்னடத்தையைத் தவறவிட்டு அவனை தண்டிக்கும் இடங்களில் ரசிகர்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதிக்கிறார்.

பாலா.. இப்படி ஒருவர் நமது நண்பராகவோ, உறவினராகவோ இருந்தால், அவரை அப்படியே விட்டுவிடக் கூடாது என்பதை உணர்த்துவது போல் படம் முழுவதும் பாவபட்டு நிற்கிறார் செந்தில் குமரன் முனியாண்டி. முகத்தில் ஆயிரம் சோகக் கீற்றுகளை வெளிப்படுத்துகிறார். அதிலும், அப்போயிடம் “இயற்கை எல்லாரையும் சமமா தான் பாக்குது அப்போய்” என்று தத்துவம் பேசும் இடங்கள் தூள் பறக்கிறது.. ஒளிப்பதிவாளராகவும், நடிகராகவும் செயல்பட்டுள்ள செந்திலின் பன்முகத் திறமைகள் பாராட்டத்தக்கவை.

Jagat“தூள் பிசினஸ் எனக்கு வேணாம்.. தூள்துளா அடிச்சு நொறுக்குற பிசினஸ் போதும்” இது மெக்சிகோ கதாப்பாத்திரம். நீண்ட தலை முடியும், நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு மல்லுக்கு நிற்கும் துணிச்சலுமாய் ஈர்க்கிறார்.

இவர்களோடு, டா காவ், வடி என சட்டென மனதில் பதிந்து விடும் இன்னும் பிற கதாப்பாத்திரங்களும் உள்ளன. வடி கதாப்பாத்திரத்தில் ‘வெண்ணிற இரவுகள்’ இயக்குநர் பிரகாஷ் ராஜாராம் நடித்துள்ளார். உண்மையில், அந்தக் கதாப்பாத்திரத்திற்கு அவரது முகவெட்டும், தோற்றமும் ஏகப் பொருத்தம்.

படத்தில் ஆங்காங்கே கதையோடு கலந்த நகைச்சுவையை சிக்காக்கோ, கிலா, தக்காளி, ராச்சோ கதாப்பாத்திரங்கள் அளித்து படம் பார்ப்பவர்களின் இறுக்கத்தை சற்று தளர்த்துகின்றன.

நடிகர்கள் அனைவருக்கும் சிங்கையின் ‘அக்னி கூத்து’ இளங்கோவனின் நடிப்புப் பயிற்சி மிகச் சிறப்பாக கை கொடுத்திருக்கிறது.

திரைக்கதை

திருப்பங்களை எங்கும் திணிக்காமல், தொடக்கத்தில் இருந்து முடிவு வரை ஒரே நேர்கோட்டில் செல்லும் திரைக்கதையை அலுப்புத் தட்டாமல் மிகவும் விறுவிறுப்பாக வழங்கியிருப்பது இயக்குநரின் திறமைக்கு சான்று.

அதே போல், சஞ்சய், யுவராஜன் மற்றும் சிவா பெரியண்ணனின் வசனங்கள் நச்சென மனதில் பதிகின்றன.

Senthilகதையோடு கடைசி வரையில் பயணிக்கும் செந்தில் குமரன் முனியாண்டியின் ஒளிப்பதிவும், கமல் சப்ரானின் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலம் சேர்த்திருக்கின்றன.

ஒளிப்பதிவில் பல காட்சிகள் நம்மை பரவசத்தில் ஆழ்த்துகின்றன. படம் முழுவதும் பயன்படுத்தப்பட்டிருக்கும் வண்ணம் கதை நடக்கும் சூழலுக்குள் நம்மைத் தள்ளுகிறது. ஈஸ்வரன் கிருஷ்ணனின் வடிவமைப்பு இயக்கத்தில் மரவீடுகள், விளையாட்டு இடம் என செட்கள் அழகு..

சமூக அக்கறையோடு, கடைசி வரை அமர்ந்து பார்க்கும் விறுவிறுப்பையும் கொண்டிருக்கும் ‘ஜகாட்’, வரும் டிசம்பர் 17 தேதி முதல், திரையரங்குகளில் வெளியாகிறது. குழந்தைகளுடன், பெற்றோர், உற்றார், உறவினர் என மலேசியர்கள் அனைவரும் பார்த்து ரசித்து பயனடைய வேண்டிய ஒரு அற்புதமான திரைப்படம்.

-ஃபீனிக்ஸ்தாசன்

 

Comments