கோலாலம்பூர் – மலரவிருக்கும் 2016 புத்தாண்டில் மலேசியர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்குடன் கேள்வி,
அரசியல் எதிர்ப்பு அலையில் நீந்திக் கொண்டிருக்கும் பிரதமர் நஜிப் துன் ரசாக், இந்த ஆண்டும் தனது அரசியல் பயணத்தில் தொடர்ந்து நீடிப்பாரா அல்லது ஆர்ப்பரிக்கும் எதிர்ப்பு அலைகளால் மூழ்கடிக்கப்பட்டு, அரசியல் களத்தை விட்டே வெளியேறுவாரா என்பதுதான்!
ஆனால், இன்று மலேசிய நாட்டு மக்களுக்கு வழங்கிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், பிரதமர், கடந்து போன 2015ஆம் ஆண்டில், பல விவகாரங்கள் பூதாகாரமாக உருவகப்படுத்தப்பட்டன என்றும், ஒரு சிலரது உள்நோக்கங்களுக்காக அரசியலாக்கப்பட்டன என்றும் கூறியிருக்கின்றார்.
2015ஆம் ஆண்டு நினைவுகூரத்தக்க ஓர் ஆண்டாக இருந்தது என்றும் எதிர்வரும் ஆண்டில் ஒரு பாதுகாப்பான, வளமான, சரிசமமான சமுதாயத்தை உருவாக்குவதுதான் தனது இலக்கு என்றும் நஜிப் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கின்றார்.
நாட்டின் வளர்ச்சியிலிருந்து எந்தவொரு மலேசியரும் விடுபட்டு விடாமல் இருப்பதைத் தான் உறுதிசெய்யவிருப்பதாகவும் கூறியுள்ள நஜிப் “எங்களுக்கென ஒரு திட்டம் இருக்கின்றது. அந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுகின்றது, நாங்களும் மக்களுக்கு தேவையானவற்றை தந்து கொண்டிருக்கின்றோம்” என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை வலிமையுடன் வைத்திருப்பது, வெளிநாட்டுத் தாக்கங்களைத் தகுந்த முறையில் நிர்வகிப்பது, மக்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவைதான் 2016ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் முதன்மைப் பணிகளாக இருக்கும் என்றும் நஜிப் உறுதி கூறியுள்ளார்.
எல்லாத் திட்டங்களும், அரசாங்கக் கொள்கைகளும் மக்களுக்குத் தெளிவான பலன்களைக் கொண்டுவரும் வகையில் அவை அரசாங்கத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், மறு ஆய்வு செய்யப்படும் என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.
நடந்து போனவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, 2020 திட்ட இலக்குகளை அடைவதற்கு, மலேசியர்கள் தயாராக வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடுமையான அரசியல் போராட்டங்களை 2015ஆம் ஆண்டில் சந்தித்த நஜிப்புக்கு, எதிர்வரும் 2016ஆம் ஆண்டும் சவால்களைக் கொண்டதாகவும் பெரும் அரசியல் போராட்டங்களைக் கொண்டதாகவும் இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
நஜிப் பதவி விலக வேண்டும் என துன் மகாதீர் நடத்தி வரும் போராட்டம் – வெளிநாட்டுத் தகவல் ஊடகங்களான சரவாக் ரிப்போர்ட், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்றவை வெளியிட்டு வரும் அதிர்ச்சி தரும் எதிர்ப்புச் செய்திகள் – 1 எம்டிபி விவகாரம் – மொகிதின் யாசின், ஷாபி அப்டால் அம்னோவில் தூக்கியுள்ள எதிர்ப்புக் கொடி – பெர்சே நடத்தவிருக்கும் மக்கள் பேரணிகள் – இவற்றுக்கிடையில் 2016ஆம் ஆண்டை அரசியல் ரீதியாக எவ்வாறு நஜிப் கடந்து வரப் போகின்றார் என்பது மலேசிய அரசியலில் சுவாரசியமான எதிர்பார்ப்பாக தொடர்ந்து இருந்து வரும்.