கோலாலம்பூர் – கடந்து போன பொங்கல் தினம் மலேசியாவில் நாடு முழுவதிலும் பல்வேறு நிகழ்ச்சிகளாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பினாங்கில் மாநில அளவில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் போது, பொங்கல் பானையில் பால் ஊற்றியிருக்கின்றார்.
அதேபோன்று மஇகா தலைமையகத்திலும் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மஇகா தலைவர்களும் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.
ஏன் சிங்கப்பூரில் கூட, அந்நாட்டுப் பிரதமர் லீ சியன் லுங் இந்தியர்களோடு பொங்கல் வைத்துக்கொண்டாடியிருந்தார்.
பினாங்கில் நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் தனது காலணிகளைக் கழற்றி விட்டு, பொங்கல் பானையில் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் பால் ஊற்றிய படங்கள் இணையத் தளங்களிலும், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களிலும் வெளியிடப்பட்டது.
ஆனால், மஇகா தலைமையகத்தில் வைக்கப்பட்ட பொங்கல் நிகழ்ச்சியில் டத்தோ எம்.சரவணன் உள்ளிட்ட மஇகா தலைவர்கள் காலணி அணிந்து பொங்கல் பானையில் பால் ஊற்றிய படங்களும் இணையத் தளங்களில் வெளியிட்டப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லுங் வைத்த பொங்கல்….
இதனைத் தொடர்ந்து, இணையத் தளங்களில் தற்போது ஒரு புதிய சர்ச்சை உருவாகி விறுவிறுப்பாக பரிமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
அதாவது, பொங்கல் வைக்கும் போது ஒருவர் காலணி அணியலாமா? பொங்கல் வைப்பது சமய நிகழ்ச்சியா? அல்லது கலாச்சார நிகழ்ச்சியா? என்பது போன்ற சுவாரசியமான கேள்விகளும், சர்ச்சைகளும் உருவாகியுள்ளன.
ஜசெகவைச் சேர்ந்தவர்கள் ஏதோ மஇகா தலைவர்கள் குற்றம் புரிந்து விட்டது போல் வரிந்து கட்டிக் கொண்டு, காலணி அணிந்து கொண்டு பொங்கல் வைத்தது குறித்து சரமாரியாகத் தாக்கி வருகின்றனர்.
ஆனால், மஇகாவினரோ, மஇகா தலைவர்கள் பொங்கல் வைத்தது மஇகா தலைமையகத்தில்தான், ஆலய வளாகத்தில் அல்ல – எனவே, அங்கு காலணி அணிந்திருந்ததில் தவறு ஏதும் இல்லை எனச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
மாறாக, லிம் குவான் எங் கலந்து கொண்ட பொங்கல் நிகழ்ச்சி ஆலய வளாகத்தில் நடைபெற்றதால் அவர் காலணிகளை கழற்றிவைத்து விட்டு கலந்து கொள்ள நேர்ந்தது என்றும் மஇகா தரப்பில் இணையத் தளங்களில் தற்காத்துப் பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு சில நடுநிலையாளர்களோ, இதுபோன்ற கலாச்சார நிகழ்ச்சிகளை அரசியலாக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பிரபல அரசியல் விமர்சகரான எழுத்தாண்மை ஏந்தல் பெரு.அ.தமிழ்மணி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் “இதை அரசியலாக்க வேண்டாம்! தனிப்பட்ட மனிதர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கும் கட்சிக்கும் எந்தவகையான சம்பந்தமும் கிடையாது. ஒரு நிகழ்வில் ஏற்பட்ட தவறுக்கு கட்சி சம்பந்தப்பட முடியாது. அதனால் ஜசெக – ம இ கா என்று கொள்கை வகுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
பொங்கல் வைப்பது கலாச்சார நிகழ்ச்சியா அல்லது சமய நிகழ்ச்சியா என்பதுதான் இப்போதைக்கு சர்ச்சையாகியுள்ள கேள்வி!
பல்வேறு வாசகர்களும் இது குறித்து இணையப் பக்கங்களில் தங்களின் கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.