பழனி – தமிழ் கடவுள் முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் இன்று தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பூச நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் இணையும் நாள்தான் தைப் பூசமாகக் கொண்டாடப்படுகிறது.
கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவின் 6-வது நாளான நேற்று முத்துக்குமாரர் – வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அங்கு கூடி இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், கந்தனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர்.
மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து, மலர் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் தீபாராதனை, அர்ச்சனை, ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம், வேதபாராயணம், வேத மந்திரங்கள் முழங்க திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க தீபாராதனை நடந்தது.
அப்போது முத்துக்குமாரசுவாமி – வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து, தைப்பூச திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசத் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
இதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி, சண்முகநதியில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சியும், 11 மணிக்கு மேஷ லக்னத்தில் திருத்தேரேற்றமும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, மாலை 4.25 மணிக்கு, தைப்பூசத் திருத்தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இரவு 7.30 மணிக்கு, தந்தப்பல்லக்கில் தேர்பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறும் எனத் தெரிய வருகிறது.
பாதுகாப்பிற்கு 3000 காவலர்கள் குவிப்பு
பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து இருப்பதால், பாதுகாப்பு கருதி 3000 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பழனி மலையைச் சுற்றி, ஆளில்லா விமானங்கள் மூலமும் கண்காணிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.