Home Featured நாடு “பாத யாத்திரையின்போது பாதுகாப்பு அம்சங்களைக் கையாளுங்கள்” – சுப்ரா வேண்டுகோள்!

“பாத யாத்திரையின்போது பாதுகாப்பு அம்சங்களைக் கையாளுங்கள்” – சுப்ரா வேண்டுகோள்!

561
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தைப்பூசத்தை முன்னிட்டு சிரம்பானிலிருந்து பாத யாத்திரை மேற்கொண்டு வந்த பக்தர்கள் சிலர் கார் விபத்தால் பாதிக்கப்பட்டு அதில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் மேலும், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு இன்னும் ஒருவருடைய நிலை சற்று மோசமாக உள்ளது.

Thaipusam-2016-car accident victims-subra visitபாதிப்படைந்தவர்களை நேரில் சென்று கண்டு ஆறுதல் கூறியுள்ள மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், இது குறித்து நேற்று விடுத்த அறிக்கையொன்றில், பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

“விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிரம்பான் நகரிலிருந்து கடந்த 21ஆம் தேதியிலிருந்து அவர்களது பாத யாத்திரையை மேற்கொண்டு வந்துள்ளனர். பாத யாத்திரையில் வந்தவர்களிடம் இது குறித்து பேசிய பொழுது அவர்கள் அந்தச் சாலையில் ஒதுக்குப்புறமாகவும் பாதுகாப்பாகவும்தான் வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்” என சுப்ரமணியம் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

“அவர்கள் பாத யாத்திரை மேற்கொண்டிருந்த வேளையில் ஒரு வாகனமோட்டி அவரது வாகனத்தின் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பொறுப்பற்ற முறையில் அவர்கள் மீது மோதியுள்ளார். இதனால் 3 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். வாகனமோட்டியின் கவனக் குறைவாலும் பொறுப்பற்ற செயலாலும் இச்சம்பவம் ஏற்பட்டுள்ள காரணத்தால் காவல் துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்றும் சுப்ரா தனது அறிக்கையில் காவல் துறையினரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Thaipusam-2016-accident-1“அதேநேரத்தில் நம் மக்கள் தைப்பூசம் மட்டுமின்றி நாடு தழுவிய நிலையில் இருக்கக்கூடிய திருவிழாக் காலங்களில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். உதாரணமாக, பங்குனி உத்திரத்திற்கு மாரானுக்கும் சித்திரா பெளர்ணமி அன்று தெலுக் இந்தான் செல்வதும் வழக்கமாக இருந்துள்ளது. அப்படி செல்லும்போது இருக்கக்கூடிய வாகன நெரிசல்களை அறிந்து அவர்களுக்குப் பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றிக் கொள்ளும் முறைகளையும் உயர்த்த வேண்டுமென்றுதான் கூற வேண்டும். குறிப்பாக, காவல் துறையினரின் அனுமதியோடு அவர்களுடைய உதவியையும் பாதுகாப்பையும் பெற்றிருத்தல் வேண்டும்” என்றும் சுப்ரா மேலும் தெரிவித்துள்ளார்.

“அதுமட்டுமின்றி நம்முடைய சுய முயற்சியைக் கொண்டும் ஒரு சில பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதும் அவசியமாகின்றது. இதனைச் சரியாக செய்தோமென்றால் வருங்காலத்தில் பாத யாத்திரை மேற்கொள்ளும்போது பக்தர்கள் பாதுகாப்பாகவும் பயமின்றியும் செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கும்” என்றும் சுப்ரா கூறியுள்ளார்.

“அவ்வகையில், ஆன்மீக ரீதியாக தொடங்கப்பட்ட குடும்பங்களின் பயணமானது துயரச் சம்பவமாக மாறியது மனத்திற்கு மிகவும் கவலையளிக்கின்றது. எச்யுகேஎம் (HUKM) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் மரணமுற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களை கோலாலம்பூர் மருத்துவமனையிலும் சென்று கண்டிருந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விரைவில் நலம் பெற இறைவனையும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்” என்றும் சுப்ரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.