Home Photo News “இந்தியர் புளூபிரிண்ட் திட்டம் – தேவை மறு ஆய்வல்ல! அமுலாக்குவதற்கான உறுதிப்பாடு மட்டுமே!” டாக்டர் சுப்ரா...

“இந்தியர் புளூபிரிண்ட் திட்டம் – தேவை மறு ஆய்வல்ல! அமுலாக்குவதற்கான உறுதிப்பாடு மட்டுமே!” டாக்டர் சுப்ரா அறைகூவல்

870
0
SHARE
Ad

முன்னாள் சுகாதார அமைச்சரும்,
மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவருமான
டத்தோஶ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களின்
பத்திரிகை அறிக்கை

இந்தியர் புளூபிரிண்ட் திட்டம் – தேவை மறு ஆய்வல்ல! அமுலாக்குவதற்கான உறுதிப்பாடு மட்டுமே!

மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா அறைகூவல்

கடந்த திங்கட்கிழமை செப்டம்பர் 27-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி 12-வது மலேசியத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றியபோது, அந்தத் திட்டத்தில் மலேசிய இந்தியர்களுக்கான புளூபிரிண்ட் எனப்படும் 10 ஆண்டு வியூகப் பெருந்திட்டமும் இணைத்துக் கொள்ளப்படும் என்று கூறியது எனக்கு நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் தந்த தருணமாக அமைந்தது எனலாம்.

எனது நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. 23 ஏப்ரல் 2017 என்ற வரலாற்றுபூர்வ நாளின் சம்பவங்கள் என் கண்முன் நிழலாடின.

#TamilSchoolmychoice

ஆம்! அன்றுதான் இந்திய சமூகத்திற்கான விடிவு, கால ஓட்டத்தில் அடுத்த சில ஆண்டுகளில் பிறக்கும் என்ற நம்பிக்கையை நமது இந்திய சமூகத்தினரிடையே விதைத்த புளூபிரிண்ட் என்னும் வியூகப் பெருந்திட்டம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள்.

அப்போதைய பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் புளூபிரிண்ட் திட்டத்தை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய நான் “மலேசிய இந்தியர்களைப் பொறுத்தவரை இந்நாள் ஒரு வரலாற்றுபூர்வ தருணம்” எனக் குறிப்பிட்டேன்.

11-வது மலேசியத் திட்டம் அறிவிக்கப்பட்டபோதுதான், மலேசிய இந்தியர்களுக்கான வியூகப் பெருந்திட்டத்திற்கான உருவாக்கத்திற்கான செயல்பாடுகளும் கொள்கை அளவில் மேற்கொள்ளப்பட்டன.

நஜிப்பின் ஆதரவும், உறுதிப்பாடும்தான் புளூபிரிண்ட் உருவாகக் காரணம்

பிரதமராக இருந்த நஜிப் துன் ரசாக்கின் கடப்பாடும், ஈடுபாடும்தான் இந்த வியூகப் பெருந்திட்டம் அதிகாரபூர்வமாக முழுமை பெற்று, அறிவிக்கப்படுவதற்கான முதற்காரணமாகும்.

2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நஜிப் துன் ரசாக் “மலேசியாவின் தேசிய நீரோட்ட வளர்ச்சித் திட்டத்தில் இந்திய சமூகம் விடுபட்டிருக்கிறது. பின்தங்கி விட்டது. எனவே, அந்த சமூகத்தைத் சூழ்ந்திருக்கும், சமூக, பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க அவர்களுக்கு கூடுதலான ஆதரவும், நடவடிக்கைகளும் வழங்கப்படும்” என அறிவித்தார்.

அவரின் இத்தகைய துணிச்சலான உறுதிப்பாடும், நமது இந்திய சமூகத்தின் பிரச்சனைகளை உண்மையிலேயே புரிந்து கொண்ட விதத்திலும் தந்த முழுமையான ஆதரவும்தான், புளூபிரிண்ட் திட்டத்தை அதிகாரபூர்வமாக வெளியிடுவதில் இருந்த அரசாங்க நடைமுறைச் சிக்கல்களையும், தடைகளையும் நம்மால் தாண்டி வர முடிந்தது.

2018-இல் கிடப்பில் போடப்பட்ட புளூபிரிண்ட் திட்டம்

துரதிர்ஷ்டவசமாக 2018-இல் தேசிய முன்னணி அரசாங்கம் பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு ஆட்சியை இழந்தது.

இதைத் தொடர்ந்து புளூபிரிண்ட் திட்டத்தின் அமுலாக்கமும் தடைப்பட்டது. அந்தத் திட்டம் அப்படியே புறக்கணிக்கப்பட்டது. அடுத்து வந்த பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி அரசாங்கத்திடம் இந்திய சமூகத்திற்கு உதவ வேண்டும் என்ற கடப்பாடோ, புளூபிரிண்ட் திட்டத்தின் பரிந்துரைகளைச் செயலாக்க வேண்டும் என்ற நடவடிக்கைகளோ எதுவும் காணப்படவில்லை.

புளூபிரிண்ட் திட்டத்திற்கு மாற்றாக வேறு எந்தத் திட்டத்தையும் இந்திய சமூகத்திற்கென அவர்கள் உருவாக்கவும் இல்லை. பரிந்துரைக்கவும் இல்லை.

பக்காத்தான் அரசாங்கத்திற்குப் பின்னர் ஆட்சி அமைத்த பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் அரசாங்கத்திற்கு, கொவிட்-19 தொற்று பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் போராட்டத்திற்கும், அவர்களுக்கு இருந்த அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான போராட்டத்திற்கும்தான் நேரம் சரியாக இருந்ததே தவிர, இந்தியர்களின் புளூபிரிண்ட் திட்டத்தைக் கவனிக்க அவர்களால் முடியவில்லை.

இந்திய சமூகத்திற்கு மகிழ்ச்சியளித்த இஸ்மாயில் சாப்ரியின் அறிவிப்பு

இத்தகைய சூழ்நிலையில்தான் 12-வது மலேசியத் திட்டத்தில் இந்தியர்களுக்கான புளூபிரிண்ட் திட்டமும் இணைத்துக் கொள்ளப்படுகிறது என நடப்புப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்தது, நமக்கெல்லாம் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த அறிவிப்பாகும்.

இந்தியர் புளூபிரிண்ட் திட்டத்தின் உருவாக்கத்திற்கான தூண்களாக அமைந்திருக்கும் 4 அடிப்படை அம்சங்களின் அனைத்துக் கூறுகளையும் அரசாங்கம் அமுலாக்கும் என நான் நம்புகிறேன்.

இந்த 4 அடிப்படை அம்சங்களின் தொடர்பில் சுமார் 20 உட்கூறுகள் முக்கியமாக இந்தத் திட்டத்தில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

இந்திய சமூகம் எதிர்நோக்கும் அனைத்து முக்கிய பிரச்சனைகளையும் நன்கு ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளாக பரிந்துரைகளை இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கியிருக்கிறோம்.

புளூபிரிண்ட் திட்டத்தை அமுலாக்க அரசாங்கத்தின் உறுதிப்பாடு தேவை

இந்த புளூபிரிண்ட் திட்டத்தை ஆராயவும், அதை எவ்வாறு அமுலாக்குவது என்பது குறித்து ஆலோசனை வழங்கவும், பேராசிரியர் சிவமுருகன் பாண்டியன் தலைமையில் பினாங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஒரு குழுவை அரசாங்கம் அமைத்திருக்கிறது.

இந்த ஆலோசனைக் குழுவினர் என்னையும் சந்தித்து கலந்தாலோசித்தனர். “புளூபிரிண்ட் திட்டத்தை மறு ஆய்வு செய்யத் தேவையில்லை. நமக்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் இந்தத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தப் போகிறோம் என்பதற்கான வியூகம்தான். சுருக்கமாகச் சொல்லப் போனால், இந்தத் திட்டத்தை அமுலாக்குவதற்கான துணிச்சலான அரசியல் உறுதிப்பாடுதான் இப்போதைய தேவை” என நான் அவர்களிடம் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் கூறியிருக்கிறேன்.

இத்தகைய ஆலோசனை வழங்கும் நடவடிக்கையின் அவசியம் என்ன என்பது  குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன். காரணம், இந்தத் திட்டத்தை மறு ஆய்வு செய்வதும், மீண்டும் விவாதிப்பதும் நேரத்தை விரயமாக்கும் செயல் எனக் கருதுகிறேன். எவ்வளவுதான் ஆராய்ச்சிகளும், மறு ஆய்வுகளும், மேற்கொண்டாலும் அவற்றையெல்லாம் செயல்படுத்துவதற்கான அரசியல் உறுதிப்பாடு அரசாங்கத்திடம் இல்லையென்றால், அத்தகைய முயற்சிகளெல்லாம் வீணாகப் போய்விடும்.

எனவே, 12-வது மலேசியத் திட்டத்தில் இந்தியர் புளூபிரிண்ட் திட்டம்  இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அதை முழுமையாகச் செயல்படுத்துவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாடு இருக்கும் – இருக்கவேண்டும் என நான் நம்பிக்கையோடு பிரார்த்திக்கிறேன்.

அமுலாக்குவதற்கான ஆலோசனைகள் சில…

இந்தியர்களுக்கான புளூபிரிண்ட் திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்த, பிரதமர் துறையின் கீழ் பல்வேறு துறைகளின் நிபுணத்துவப் பின்னணி கொண்ட சிறப்பு நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

அத்துடன், வணிகம், கல்வி, சமூக, பொருளாதாரத் துறைகளைச் சார்ந்த தலைவர்களைக் கொண்ட ஆலோசனை மன்றம் ஒன்றும் அமைக்கப்பட வேண்டும்.

புளூபிரிண்ட் திட்டத்தை அமுலாக்குவதற்காக அமைக்கப்படும் பிரதமர் துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவிற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதும், உதவிகள் வழங்குவதும் இந்த ஆலோசனை மன்றத்தின் பணியாகவும், பங்களிப்பாகவும் இருக்க வேண்டும்.

அமுலாக்க சிறப்பு நடவடிக்கைக் குழு அவ்வப்போது பிரதமரிடமே நேரடியாகச் சந்திப்பு நடத்தி புளூபிரிண்ட் அமுலாக்கத்தில் தாங்கள் கண்டு வரும் முன்னேற்றங்களையும், திட்டத்தை அமுலாக்குவதில் தாங்கள் எதிர்நோக்கும் சவால்களையும் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் தேவைப்பட்டால் பிரதமர் நேரடியாகத் தலையிட்டு, நாம் எதிர்நோக்கும் தடைகளையும், சவால்களையும் தீர்த்து வைக்க முடியும்.

மலேசிய இந்தியர் புளூபிரிண்ட் என்பது வெறும் ஆவணமாக மட்டும் பார்க்கப்படக் கூடாது. அணுகப்படக் கூடாது. மாறாக, அந்தத் திட்டம் இந்திய சமூகத்தை உருமாற்றுவதற்கான உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும் நமக்கான விடியலாகும்.

அந்தத் திட்டத்தின் அமுலாக்கம் மூலம் நமது இந்திய சமுதாயம் பெரிதும் எதிர்நோக்கியிருக்கும் புதிய விடியல் தோன்றி, அவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் பரப்புமா என்பதைக் காண பொறுமையுடன், நம்பிக்கையுடன் காத்திருப்போம்.