கோலாலம்பூர் : 12-வது மலேசியத் திட்டத்தில் இந்தியர்களுக்கான புளூபிரிண்ட் எனப்படும் வியூகப் பெருந்திட்டம் சேர்த்துக் கொள்ளப்படும் என பிரதமர் இஸ்மாயில் சாப்ரியால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனினும் பிரதமரின் இந்த அறிவிப்பு இந்தியர்களைத் திருப்தி செய்ய விடுக்கப்பட்ட கண்துடைப்பு அறிவிப்பா? அல்லது உண்மையிலேயே அரசாங்கம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆர்வம் கொண்டிருக்கிறதா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
காரணம், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முதல் கட்டமாக நிதி ஒதுக்கீடு எதுவும் அறிவிக்கவில்லை.
இந்தியர்களுக்கான புளுபிரிண்ட் திட்டத்தை அமுலாக்க பெருமளவில் நிதி ஒதுக்கீடு தேவைப்படும்.
புளுபிரிண்ட் எனப்படும் இந்திய சமூகத்திற்கான 10 ஆண்டுகால வியூகப் பெருந்திட்டம் முதன் முதலில் 2017-இல் அறிவிக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் நஜிப் துன் ரசாக் இதன் செயலாக்கத்தில் காட்டிய தீவிரம் அதற்குப் பிறகும், இப்போதும் காட்டப்படவில்லை.
2017-க்கும் இன்றைய காலகட்டத்திற்கும் வித்தியாசங்கள்
2017-இல் இந்திய சமூக மேம்பாட்டுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழு நஜிப் தலைமையில் இயங்கி வந்தது. செடிக் என்ற இந்தியர் உருமாற்றத் திட்டப் பிரிவு நேரடியாகப் பிரதமரின் பார்வையில், பிரதமர் துறையிலேயே இயங்கி வந்தது.
அப்போதைய மஇகா தேசியத் தலைவரும் அமைச்சருமான டத்தோஶ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் புளூபிரிண்ட் திட்டத்திற்கான தலைவராக செயல்பட்டார். திட்ட செயலாக்கத்திற்காக அனைத்து இந்திய அரசியல் கட்சிகளையும், இந்திய இயக்கங்களையும் உள்ளடக்கிய செயல்குழு ஒன்றை டாக்டர் சுப்ரா தோற்றுவித்தார்.
இப்போது எல்லாமே மாறிவிட்டது. செடிக், மித்ராவாக பெயர் மாற்றம் கண்டிருக்கிறது. அந்த இலாகா பிரதமர் துறையில் இருந்து எடுக்கப்பட்டு, ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ், ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் செயல்படுகிறது.
இந்திய சமூக மேம்பாட்டுக்கான அமைச்சரவைக் குழு என்றும் எதுவும் இல்லை.
இந்நிலையில் இந்தியர் புளூபிரிண்ட் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படவிருக்கிறது? இதற்கான நிதி ஒதுக்கீடுகள் எங்கே? இதற்குப் பொறுப்பேற்று நடத்தப்போவது யார்?
என்பது போன்ற கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்களைப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி வழங்காத வரையில் இந்தியர்களுக்கான புளூபிரிண்ட் அறிவிப்பு வெறும் கண்துடைப்பாகவே இருந்து வரும்.
-இரா.முத்தரசன்
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal