Home நாடு ஷாபி அப்துல்லா: 9.5 மில்லியன் வழக்கு – உடனடித் தீர்ப்பு பெற வருமானவரி இலாகா மனு

ஷாபி அப்துல்லா: 9.5 மில்லியன் வழக்கு – உடனடித் தீர்ப்பு பெற வருமானவரி இலாகா மனு

701
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் பெரும்பாலான வழக்குகளில் அவருக்காக வழக்காடுபவர் முகமட் ஷாபி அப்துல்லா.

அவர் நஜிப்பிடம் இருந்து 9.41 மில்லியன் பணம் பெற்றதாகவும் அந்தத் தொகையை வருமான வரி இலாகாவிடம் அறிவிக்கவில்லை என்றும் ஷாபி அப்துல்லா மீது வருமான வரி இலாகா வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்கில் சம்மரி ஜட்ஜ்மெண்ட் எனப்படும் உடனடித் தீர்ப்பைப் பெற செவ்வாய்க்கிழமையன்று (28 செப்டம்பர்) கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பில் மனு ஒன்று சார்வு செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

சம்மரி ஜட்ஜ்மெண்ட் என்பது (summary judgment) என்ன என்று பார்ப்போம். வழக்கில் பிரதிவாதியான அதாவது முகமட் ஷாபி அப்துல்லாவுக்கு முறையான தற்காப்பு வாதம் எதுவும் இல்லை என்றும் ஆவணங்களின் ஆதாரங்களின்  அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், முழு விசாரணைக்காக எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சங்கள் எதுவும் வழக்கில் இல்லை என்றும் வாதி மனு ஒன்றைச் சமர்ப்பிப்பார்.

இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால், நீதிமன்றம் உடனடி தீர்ப்பை வழங்கும். நீண்ட விசாரணைகள், சாட்சிகளின் விசாரிப்பு எதுவும் நடைபெறாது. ஆவணங்களில் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்படும்.

இத்தகைய மனுவைத்தான் வருமானவரி இலாகா ஷாபி அப்துல்லாவுக்கு எதிராக சமர்ப்பித்திருக்கிறது.

இந்த மனுவில் வெற்றி பெற்றால் அதைத் தொடர்ந்து அந்த ‘சம்மரி ஜடஜ்மெண்ட்’ தீர்ப்பை வருமான வரி இலாகா அமுல்படுத்த முடியும்.

ஷாபி மீதான வழக்கின் விவரங்கள் என்ன?

தன்மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு தன்னை அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கை என வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.

கடந்த 5 ஆண்டுகளாக அவர் செலுத்தாத வருமான வரி பாக்கிக்காக இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மே 6-ஆம் தேதி இந்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஷாபி அப்துல்லா மொத்தம் செலுத்த வேண்டிய வருமானவரி பாக்கித்தொகை 9,414,708.32 என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal