கோலாலம்பூர் : 1956-இல் தொடங்கி, கடந்த 65 ஆண்டுகளாக எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியப் பாடம் இடம்பெற்று வருகிறது.
இதன்வழி, தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் இடைநிலைப்பள்ளியில் தமிழோடு தமிழ் இலக்கியத்தையும் பயின்று எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சியைப் பெறும் வாய்ப்பினைப் பெற்று வருகின்றனர்.
இவ்வாண்டு நான்காம் படிவத்தில் பயிலும் மாணவர்களுக்குப் புதிய பாடநூல்கள் அறிமுகமாகியுள்ளன. கவிதை, நாடகம், நாவல் என மூன்று இலக்கிய வகைகளில் மூன்று நூல்கள் இடம்பெற்றுள்ளன.
‘கவிதைப் பொழில்’ (12 கவிதைகள்), பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ‘பிசிராந்தையார்’ (நாடகம்), டாக்டர் மு.வரதராசன் எழுதிய ‘வாடா மலர்’ ஆகியனவே அந்நூல்களாகும். படிவம் 4 & 5 ஆகிய ஈராண்டுகளிலும் இவை மட்டுமே பாட நூல்கள்.
தமிழ் இலக்கியம் எஸ்.பி.எம். தேர்வில் ஒரு தேர்வுப் பாடமாக இருந்தாலும், இதுகாறும், அதற்கான பாடத்திட்டத்தை மட்டும் மலேசியத் தேர்வு வாரியம் வெளியிட்டு வந்தது. பாட நூல்களை மாணவர்களுக்குப் பெற்றுத்தரும் பெரும் பொறுப்பை, மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் (இலக்கியகம்) ம.இ.காவின் துணையோடு செயல்படுத்தி வந்தது. சமூக இயக்கங்கள், நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் தொடர்ந்து தம் பங்களிப்பை வழங்கி வந்தனர்.
மேனாள் கல்வித் துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் துணையோடு கல்வி அமைச்சின் கலைத்திட்ட மேம்பாட்டுப் பிரிவு, பாடநூல் பிரிவு ஆகிய தரப்புகளின் இடையறா முயற்சியாலும் ஒத்துழைப்பாலும் பங்களிப்பாலும் இடைநிலைப்பள்ளிகளுக்கான புதிய கலைத்திட்டப் பட்டியலில் இணைக்கப்பட்டு மற்றப் பாடங்கள்போல் கல்வி அமைச்சின் பாட நூல் பிரிவு பாட நூல்களை இவ்வாண்டு முதல் பள்ளிகளில் வழங்கியுள்ளது.
இனி, மற்றப் பாடநூல்கள்போல் இரவல் முறையில் இந்நூல்கள் பள்ளியில் கிடைக்கும். எனவே, இதுவரை பாடநூல்களை மாணவர்களுக்குப் பெற்றுத்தருவதில் இருந்த சிக்கல் நீங்கியுள்ளது. தமிழ் இலக்கியப் பாடம் நிலைபெறவும் மாணவர்கள் எண்ணிக்கை உயரவும் வழிவகுத்துள்ள இந்நிலைக்கு பங்களித்த அனைவரும் சமுதாயத்தின் நன்றிக்குரியவர்கள்.
வழிகாட்டி நூல்
புதிய பாடநூல்களைப் பயன்படுத்தும் ஆசிரியருக்கும் மாணவருக்கும் உதவும் நோக்கில் இலக்கிய வழிகாட்டி நூல் தயாராகியுள்ளது.
இந்நூலை இலக்கிய ஆசிரியர் ந.பச்சைபாலன் எழுதியுள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை என இலக்கியப் பரப்பில் தம் பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் ந.பச்சைபாலன், எஸ்.பி.எம். மாணவர்களுக்காக ஏடுகளில் இலக்கியப் பாடத்திற்கான கட்டுரைகளைப் படைத்து வருகிறார். படிவம் 4 & 5 மாணவர்களுக்கு இணையம்வழி தமிழ்மொழி, இலக்கிய வகுப்புகளை நடத்தி வருகிறார்.
ஆசிரியர் இன்றிப் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படும் நோக்கில் கவிதை, நாடகம், நாவல் ஆகிய மூன்று பகுதிகளுக்கும் விரிவான விளக்கங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. புதிய தேர்வுத்தாள் அமைப்பு பற்றிய விளக்கமும் உள்ளது. மேலும், நூறு பக்கங்களில் மாதிரிக் கேள்விகளும் அவற்றுக்கு முழுமையான விடைகளும் சுயமுயற்சிக்கான பயிற்சிகளும் உள்ளதால் அவை சிறந்த பயனைத் தரும்.
தேர்வுக்குத் தேவையான அனைத்துக் கூறுகளும் இந்நூலில் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. 2024 வரை உள்ள புதிய இலக்கியப் பாட நூல்களையொட்டிய இந்த வழிகாட்டி நூலைத் தற்போது படிவம் இரண்டு முதல் நான்குவரை பயிலும் மாணவர்கள் பெற்றுப் பயன்பெறலாம்.