Home நாடு “தனி ஒருவன் நினைத்துவிட்டால்” அண்ணாதுரை காளிமுத்துவின் நூல் வெளியீடு

“தனி ஒருவன் நினைத்துவிட்டால்” அண்ணாதுரை காளிமுத்துவின் நூல் வெளியீடு

812
0
SHARE
Ad
அண்ணாதுரை காளிமுத்து

காஜாங் : மலேசிய சிறைத்துறையில், கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்னர் சிறைச்சாலை இன்ஸ்பெக்டராக பணியைத் தொடங்கிய அண்ணாதுரை காளிமுத்து, பல நிலைகளில் பணி புரிந்து இன்று சிறைத் தலைமையகத்தில் பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவுப் பகுதியின் துணை இயக்குநராக பதவி வகித்து வருகிறார். இவரின் அரிய முயற்சியில் ‘தனி ஒருவன் நினைத்துவிட்டால்’ எனும் நூல் உருவாகியுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு மலேசியச் சிறைகளில் இருக்கும் தண்டனைக் கைதிகளில் 12.3 விழுக்காட்டினர் (7500) இந்தியர்கள். மலேசிய மக்கள் தொகையில் 6.9 விழுக்காடாக இருக்கும் நாம் குற்றச்செயல்களில் மட்டும் ‘கொடிகட்டிப் பறப்பது’ நமக்குள் வருத்தத்தை விதைப்பதாக உள்ளது. அதற்கான காரணங்கள் பற்றிச் சிந்திப்பதோடு அவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்கும் பணியில் தொலைநோக்கோடு செயல்படும் உன்னத மனிதராக இருக்கிறார் சிறைத் துணை ஆணையர் அண்ணாதுரை காளிமுத்து அவர்கள்.

பணி நிமித்தமாக மலேசியா முழுவதும் உள்ள சிறைகளில் ஆயிரக்கணக்கான சிறைவாசிகளின் பின்புலத்தை ஆராயும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது. அந்த அனுபவத்தைக் கொண்டும், ஆரம்ப இடைநிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்களிடையே கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் தன்முனைப்பு மற்றும் குற்றச் செயல் தடுப்புப் பற்றிய சொற்பொழிவுகளிலும், கருத்தரங்குகளிலும், பட்டறைகளிலும் இவர் பெற்ற அனுபவங்களையும் கொண்டு ‘தனி ஒருவன் நினைத்துவிட்டால்’ எனும் இந்நூலை எழுதியுள்ளார்.

#TamilSchoolmychoice

2016-ஆம் ஆண்டு சிறைச்சாலைகளில் இந்து சமயத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்காக இந்து தர்ம பாடத் திட்டம் என்ற நூலினை மலாய் மொழியில் எழுதி, பிறகு தமிழில் டாக்டர் சண்முகசிவா அவர்களோடு இணைந்து எழுதி வெளியிட்டார். மீண்டும் 2020ல் அதே சிறைவாசிகள் பயனுறும் வகையில், சிறு மாற்றத்தோடு மறுபதிப்புச் செய்து சிறையில் உள்ள அனைத்துச் சிறைவாசிகளுக்கும் மித்ராவின் ஆதரவோடு வழங்கினார்.

இவரின் வாழ்க்கைப் பயணம், 34 ஆண்டுகாலச் சிறைப்பணியின் அனுபவங்கள், சிறைவாசிகளுடன் இவர் மேற்கொண்ட நேர்காணல்கள் ஆகியவற்றின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்துள்ளது.

மலேசிய இந்தியர்கள் குறிப்பாக, சிறைவாசிகளின் குடும்பத்தினர் அறிந்துகொள்ளும் வகையில், மலேசியாவில் சிறைத்துறை இயங்கும் முறை, அதன் முக்கியக் கூறுகள் பற்றிய தகவல்களை இந்நூலில் இடம்பெறச் செய்துள்ளார்.

அத்தோடு, சிறைவாசிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான காரணங்கள், சிறைக்கு வந்தபோது இருந்த மனநிலை, அனுபவித்த சிறை வாழ்க்கை. மறுவாழ்வுப் பயிற்சிகள் மற்றும் விடுதலையாகி வெளியேறும்போது மீண்டும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் போன்ற கூறுகளைப் பற்றியும் அவர்களாகவே கூறுவதை இந்நூலில் இடம் பெறச் செய்துள்ளார்.

‘குற்றச் செயல்களும் இந்தியர்களும் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் சிறைவாசிகளின் புள்ளி விபரத்தையும் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் விவரித்துள்ளார்.

இந்நூலின் தலைப்பு, அனைவரின் பங்கினையும் உள்ளடக்கியதாகும். தனி ஒருவனாக இவர், வாழ்க்கையில் போராடியதன் விளைவாக, இன்று வெற்றி பெற்றவராகத் திகழ்கிறார். அதேபோல், ஒவ்வொரு சிறைவாசியும் தான் செய்த தவற்றினை உணர்ந்தால் மீண்டும் குற்றச்
செயல்களில் ஈடுபட மாட்டார்கள். மேலும், சமுதாயமும் தமது கடமையை உணந்து முன்னாள் சிறைவாசிகளுக்கு உதவியினைச் செய்திட வேண்டும். அதன் வழி குற்றமற்ற இந்திய சமுதாயத்தை உருவாக்கிட முடியும் என்று இவர் உறுதியாக நம்புகிறார்.

இந்த நூல் விற்பனைவழி பெறப்படும் தொகை அனைத்தும் மலேசிய வேதாத்திரி ஸ்கை மனவளக்கலை அறக்கட்டளையின் ஆதரவோடு 2024இல் லிங்கி, நெகிரி செம்பிலானில் தொடங்கப்பட உள்ள முன்னாள் சிறைக்கைதிகளின் மறுவாழ்வு இல்லத்திற்கு வழங்கப்படும். அந்த இல்லம் இவர் மேற்பார்வையில் பராமரிக்கப்படும். இந்நூலை உருவாக்கும் உன்னதப் பணியில் ம.இ.கா.வின் எம்.ஐ.இ.டியும் ஆதரவுக்கரம் நீட்டி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசின் உயர் பதவியில் இருக்கும் நம்மில் பலர் தாமுண்டு, தம் வேலையுண்டு என ஒதுங்கி வாழும் நிலையில் சிறைச்சாலைப் பணியில் கண்டிப்புமிக்க அதிகாரியாக வலம் வந்தாலும் சிறைவாசிகள் உயர் கல்வி பெற, வழக்கறிஞர் ஆலோசனையும் சேவையும் பெற சமுதாய உணர்வோடு முன்வந்து உதவிவரும் அண்ணாதுரை காளிமுத்து நம் போற்றுதலுக்குரியவர். இவரின் அரிய முயற்சிக்குக் கைகொடுப்பது நம் அனைவரின் கடமையாகும்.

– ந.பச்சைபாலன்