Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: “சேதுபதி” – இன்னும் சுவாரசியமாக்கியிருக்கலாம்!

திரைவிமர்சனம்: “சேதுபதி” – இன்னும் சுவாரசியமாக்கியிருக்கலாம்!

770
0
SHARE
Ad

வளர்ந்து வரும் நடிகர்கள், உச்சத்தைத் தொட வேண்டுமென்றால், ஓர் ஆக்ரோஷமான போலீஸ் வேடத்தில் நடிக்க வேண்டும் – அதன் பின்னர்தான் அவரது மவுசு கூடும் என்பது தமிழ்த் திரையுலகின் நம்பிக்கைகளில் ஒன்று!

அதற்கேற்ப, இந்த முறை நேர்மையான, போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி உருவெடுத்திருக்கும் படம் சேதுபதி. பெயர் பொருத்தம் போலவே, அச்சு அசலாக ஒரு தமிழ்நாட்டு போலீஸ்காரரை நம் கண் முன் நிறுத்துகின்றார் விஜய் சேதுபதி.

வழக்கமான வாய்ச் சவடால்கள், வில்லன்களுடன் மோதும்போது பஞ்ச் டயலாக் இப்படி எதுவும் இல்லாமல், ஒரு யதார்த்தமான போலீஸ்காரராக முன்பாதியில் காட்டிவிட்டு, இடைவேளைக்குப் பின்னர் – கூட்டமாக வந்து தாக்குவது, ஆசிட் பாட்டில் வீச்சு, நடுரோட்டில் தாக்குதல் நடத்துவது – என அதே பழைய பாதைக்குத் திரும்பியிருப்பதால், நமக்கும் சில இடங்களில் போரடித்து விடுகின்றது.

#TamilSchoolmychoice

Sethupathy-poster

கதை – திரைக்கதை 

காவல் துறைக்கும், பெரிய தாதா கும்பலுக்கும் மோதல் என்றால் மதுரையை விட்டு வேறு களம் கிடைக்காது போலும். மதுரையில் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு அதிகாரியாக இருக்கும் சேதுபதி, சக போலீஸ்காரர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட, அதை விசாரிப்பதில் படம் தொடங்குகின்றது.

பின்னர், அந்த விசாரணையைச் சுற்றி வளரும் சம்பவங்களோடு, இடைவேளை வரை பயணம் செய்யும் திரைக்கதையில், இடைவேளைக்கு முன்னர் போலீஸ் ஸ்டேஷனில் ஏற்படும் ஓர் அசம்பாவிதத்தால், சேதுபதி பிரச்சனைகளை எதிர் நோக்குவதோடு, வேலையிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகின்றார்.

Sethupathy-poster 2 -தன் மீது ஏற்பட்ட பழியைத் துடைக்கவும், ஸ்டேஷனில் நிகழ்ந்த அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன என்ற விசாரணைகளில் சேதுபதி இறங்க, மீண்டும் அவர் தனது அதே வேலையில் அமர்ந்து ஸ்டேஷனுக்குத் திரும்பி வந்துவிடக் கூடாது என வில்லன் கோஷ்டி முயல்வதுதான், இடைவேளைக்குப் பின்பான திரைக்கதை.

முதலில், வழக்கமான ரவுடிக் கொலை என்பது போல் காட்டாமல், ஒரு குடும்பத்துச் சச்சரவின் பின்னணியில்தான் கொலை நிகழ்ந்துள்ளது எனக் காட்டும்போது, நாமும் நிமிர்ந்து உட்காருகின்றோம்.

ஆனால், இயக்குநர் அருண்குமார், அதன் பின்னர், தமிழ் சினிமா எப்போதுமே இதை விட்டுக் கொடுக்காது என்பதுபோல் – ஊரில் ஒரு கட்டப் பஞ்சாயத்து தாதா, அவரைச் சுற்றி பத்து ஆட்கள், நேர்மையான போலீஸ் அதிகாரி ஊருக்கு வந்தால் நடக்கும் மோதல்கள் – என  பழைய பாணிக்கே திரும்பி விடுகின்றார்.

படத்தின் பலம்

படத்திற்கு பலம் என்றால் விஜய் சேதுபதிதான். முறுக்கிய மீசையோடு, ஒரு காவல் துறை அதிகாரிக்கே உரிய பிரச்சனைகளை ரசிக்கும்படி கையாண்டிருக்கின்றார். ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு, அவரது ஒரே மாதிரியான நடிப்பினால், அதுவே போரடித்து விடுகின்றது.

Sethupathy-vijay sethupathy stillமற்றொரு ரசனையான விஷயம், சேதுபதிக்கும், அவரது மனைவியாக வரும் ரம்யா நம்பீசனுக்கும் இடையில் நடக்கும் காதல் ஊடல்கள், சில்மிஷங்கள், அரவணைப்பு பரிமாறல்கள்தான். அதுவும், சமையலறையில் வெகு இயல்பாக இருவரும் அசல் கணவன்-மனைவி போல் அந்நியோன்யமாக நடித்திருக்கின்றனர்.

ஆனால், திரும்பத் திரும்ப அதே பாணியிலான காதலையே காட்டும்போதுதான் சலிப்பு ஏற்படுகின்றது.

முதல் சண்டைக் காட்சியில், மதுரையின் குறுகலானத் தெருக்களில் சேதுபதி ஓடிச் சென்று ரவுடிகளைப் பிடிக்கும்போதும், சிறிய சிறிய கடைகளில் நுழைந்து மோதிக் கொள்ளும்போது, கேமராவும் உடன் பயணிக்கின்றது. ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன். அந்தச் சண்டைக் காட்சிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

Sethupathy-poster 3வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படும் சேதுபதியை விசாரிக்க அமைக்கப்படும் விசாரணை வாரியமும், அதன் தலைவரான குள்ளமான, குண்டான மனிதரின் அலம்பல்களும், சுவாரசியமான இடைச் செருகல்கள். விசாரணை வாரியத்தை ஒரு கடத்தல் சம்பவம் மூலம் சேதுபதி திசை திருப்புவதும் ரசிக்கும்படி இருக்கின்றது.

விசாரணை வாரியம் நடந்து கொண்டிருக்கும்போதே, நடுரோட்டில் ஒரு ரவுடியை சேதுபதி அடிக்கும்போது நமக்கும் தெரிந்து விடுகின்றது, இது வில்லன் கோஷ்டியின் வேலைதான் என்று. அந்த சம்பவத்தை அவர்கள் வீடியோ எடுத்து விசாரணை வாரியத்திற்கு அனுப்ப –

ஆனால் அடுத்த காட்சியிலோ, முகத்தைத் துணியால் கட்டி மறைத்துக் கொண்டு அதே வில்லன்களை சேதுபதி புரட்டியெடுக்கும்போது, திரையரங்கமே கலகலக்கிறது.

படத்தின் பலவீனங்கள்

திரைக்கதை இஷ்டம்போல் எங்கெங்கோ செல்வதும், சம்பந்தா சம்பந்தமில்லாத திருப்பங்களும் ஒரு பலவீனம் என்றால், பல காட்சிகள் எதிர்பார்ப்பது போலவே அமைந்துவிடுவது இன்னொரு பலவீனம்.

சேதுபதியை குடும்பமாகக் காட்டும்போதே, ஏதாவது ஒரு கட்டத்தில் வில்லன் குடும்பத்தின் மேல் கைவைப்பான் என்பது தெரிந்துவிடுகின்றது. அதை சேதுபதி சமாளிப்பது கொஞ்சம் புத்திசாலித்தனம் என்றாலும், சிறுவன் துப்பாக்கியை எடுத்து நீட்டியதும் அத்தனை ரவுடிகளை பயந்துபோய், பாய்ந்து ஓடுவது நம்பும்படியாகவா இருக்கிறது?

அதே போன்றுதான், போலீஸ் ஸ்டேஷனில் நடப்பதாகக் காட்டப்படும் அசம்பாவிதமும்! சேதுபதியின் கண் முன்னாலேயே மற்றொரு சக போலீஸ்காரரை உயிரோடு எரிக்கும் அளவுக்கு தைரியம் படைத்த வில்லன், போலீஸ் ஸ்டேஷனில் தாழ்ப்பாளை உடைத்து வைப்பதும், துப்பாக்கியை ரவைகள் நிறைத்து வைப்பதும் – ஏன் இப்படி தலையைச் சுற்றி மூக்கைத்தொட வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகின்றது.

Sethupathi-Movie-stillஅதே போன்றுதான், இறுதிக் காட்சியும். முதல் காட்சியிலிருந்து 10 பேர்களுடனே திரியும் வில்லன் கடைசிக் காட்சியில் ஆள் அரவமே இல்லாத வீட்டில் ஒத்தையாகவா படுத்திருப்பார்?

வில்லனுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையிலும் அவனை முடித்துக் கட்ட சேதுபதி ஏன் அவசரப்பட வேண்டும்?

படமும் திடீரென்று எதிர்பாராமல் முடிந்து விடுவதும், சற்று ஏமாற்றம்தான்!

இப்படியாக, பல இடங்களில் ‘லாஜிக்’ இடிக்கின்றது.

இசையும், பாடல்களும் சுமார்தான்!

இருப்பினும், விறுவிறுப்பான சம்பவங்களோடு நகரும் திரைக்கதை – ஒரு போலீஸ்காரன் தனது பணியை நேர்மையாகச் செய்ய முற்படும்போது அவனுக்கு ஏற்படும் முட்டுக்கட்டைகள் – சக போலீஸ்காரர்களே அவனுக்கு எதிராக திரும்புவது – விஜய் சேதுபதியின் நடிப்பு –

-ஆகிய காரணங்களுக்காக சேதுபதி கவரவே செய்கின்றான்!

-இரா.முத்தரசன்