கும்பகோணம் – மகாமக திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்தனர்.
குரு சிம்மத்தில் இருக்கையில், மகம் நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி தினம் தான் மகாமகம் என அழைக்கப்படுகின்றது.
அந்த நாளில் மகாமக குளத்தில் நீராடுவது, 12 கும்பமேளாவில் புனித நீராடியதற்கும், 108 ஆண்டுகள் காசியில் வாழ்ந்து கங்கையில் தினமும் நீராடியதற்கும் சமமாகக் கருதப்படுகின்றது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த விழா, கடந்த பிப்ரவரி 13-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனை முன்னிட்டு, இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடி வருகின்றனர்.
நேற்று வரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புனித நீராடியதாகக் கூறப்படுகின்றது. மகாமக விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெற்றது. இன்று மட்டும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்விழாவையொட்டி நாள்தோறும் சைவ மற்றும் வைணவ கோயில்களில், உற்சவ மூர்த்திகளின் வீதி உலாவும், 48 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டமும் வெகு விமர்சையாக நடைபெற்றது.