பெய்ஜிங் – சீனாவில் ஐபோன் வாங்குவதற்காக பிறந்து 18 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை இணையத்தளம் மூலம் விற்பனை செய்த தந்தைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள டோங்கான் நகரை சேர்ந்தவர் ஏ டுவான். அவரது காதலி ஜியாவ் மெய். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. டுவானுக்கு ஐபோன் வாங்க வேண்டும் என்று ஆசை.
ஆனால் ஐபோன் வாங்க பணம் இல்லை. இதையடுத்து அவர், பிறந்து 18 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை இணையத்தளம் மூலம் ஒருவருக்கு 14,000 ரிங்கிட் மலேசியாவிற்கு விற்பனை செய்தார்.
அவரது மனைவி மெய் மட்டுமே வேலைக்கு சென்று சம்பாதித்துள்ளார். டுவான் பொறுப்பின்றி ஊர் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் குழந்தையை வாங்கியவர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த உண்மையை கூறினார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டுவானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டுவானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
குழந்தையை விற்பனை செய்வது சட்டவிரோதமானது என தனக்கு தெரியாது என்று மெய் தெரிவித்துள்ளார். குழந்தையை வளர்க்கும் அளவுக்கு மெய்யிடம் வசதி இல்லாததால் குழந்தை அதை வாங்கியவரிடமே உள்ளது. அந்த நபர் குழந்தையை தனது சகோதரிக்காக வாங்கியுள்ளார்.