கோலாலம்பூர் – தனது பெயருக்குக் களங்கம் விளைவிப்பது போது கருத்துத் தெரிவித்துள்ள மறைந்த தனியார் துப்பறிவாளர் பாலாவின் மனைவி செந்தமிழ்ச் செல்விக்கு, வழக்கறிஞர் அமெரிக் சிங் சித்து, 48 மணி நேரங்கள் கெடு விதித்துள்ளார்.
48 மணி நேரங்களுக்குள் செந்தமிழ்ச் செல்வி தனது கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதோடு, பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நேற்று அமெரிக் சித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர் தனது கருத்தை திருப்பப் பெறவில்லை என்றால், இனி அவரது வழக்கறிஞராக தான் செயல்படப் போவதில்லை என்றும் அமெரிக் சித்து தெரிவித்துள்ளதாக ‘த ஸ்டார்’ இணையதளம் தெரிவித்துள்ளது.
மேலும், செந்தமிழ்ச் செல்வி தன்னை தர்ம சங்கடமான நிலைக்குத் தள்ளிவிட்டதாகவும், மேல்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் கூட்டரசு நீதிமன்றத்தில் நடந்து வரும் செந்தமிழ்ச் செல்வியின் நடப்பு வழக்கு விசாரணைகளில் அவருக்குத் தான் சட்ட ஆலோசராக இருந்து வருவதாகவும் அமெரிக் சித்து தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த செந்தமிழ்ச் செல்வி, ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் எடுக்கும் ஆவணப்படத்திற்கு நேர்காணல் அளிக்க சம்மதித்தால், தனக்கு உதவி செய்வதாக வழக்கறிஞர் அமெரிக் சித்து மற்றும் மேலும் சிலர் தனக்கு தொலைப்பேசி மூலம் அழைத்து வாக்குறுதி அளித்ததாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.