தூத்துக்குடி – திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்ரமணியசுவாமி கோவிலில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறப்பு வழிபாடு செய்தார். அங்குள்ள சூரசம்ஹாரமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார் சசிகலா. மே 16-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. வேட்பாளர் பட்டியலும் ஒருபக்கம் தயாராகி வருகிறது. சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று முதல்வரின் தோழி சசிகலா தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களுக்குச் சென்று சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட முக்கிய ஆலயங்களுக்கு சென்று வந்த சசிகலா தென் மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் சசிகலா நேற்று காலை 9 மணிக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
சசிகலா வருகையை முன்னிட்டு காலை 7 மணி முதலே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக காலையில் வந்த சசிகலாவை கோவில் இணை ஆணையாளர் வரதராஜன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.