அந்த சந்திப்பின்போது சென்னையிலுள்ள மலேசிய துணைத் தூதர் அகமட் பாஜரசாம் உடனிருந்தார்.
தனது வருகையின் ஒரு பகுதியாக கடந்த வியாழக்கிழமை பிப்ரவரி 2-ஆம் தேதி சென்னையிலுள்ள, மலேசியத் துணைத் தூதரக அலுவலகத்திற்கு வருகை தந்த தேவமணி அங்கு துணைத் தூதர் அகமட் பாஜரசாம் அப்துல் ஜலில் மற்றும் தூதரக அதிகாரிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தினார்.
சசிகலாவுடன் நடத்திய சந்திப்பின்போது, மலேசிய இந்தியர்கள் குறித்த பல விவரங்களை அவருடன் பகிர்ந்து கொண்டதோடு, தமிழகத்திற்கும், மலேசியாவுக்கும் இடையிலான நட்புறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்தும் விவாதித்ததாக தேவமணி தெரிவித்துள்ளார்.
அவரது தமிழக வருகை குறித்தும், சசிகலாவுடனான சந்திப்பு குறித்தும் ‘செல்லியல்’ தேவமணியுடன் செல்பேசி வழி தொடர்பு கொண்டபோது, தேவமணி மேற்குறிப்பிட்ட விவரங்களைத் தெரிவித்தார்.
நஜிப் நடவடிக்கைகள் குறித்து சசிகலாவுக்கு விளக்கம்
மேலும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மலேசிய இந்திய சமுதாயத்தின் நலன்களை முன்னிறுத்தி எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், நிதி உதவிகள் குறித்தும் சசிகலாவிடம் விரிவாக எடுத்துரைத்ததாகவும் தேவமணி மேலும் தெரிவித்தார்.
கூடுதலான தமிழ்ப் பள்ளிகளை நிறுவி, தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தது, தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாடுகளுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் கூடுதலான நிதி உதவிகள், சீட், மற்றும் செடிக் அமைப்புகளை உருவாக்கி சிறு வணிகர்களுக்கு நிதி மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குதல், அரசு சார்பற்ற இந்திய அமைப்புகளின் சமூக நோக்கு கொண்ட செயல்களுக்கு உதவும் பொருட்டு நிதி ஒதுக்கீடுகள் வழங்குதல், மெட்ரிகுலேஷன் கல்விக்கு கூடுதலான இடங்களை ஒதுக்குதல், என நஜிப் இந்திய சமுதாயத்தை உயர்த்துவதற்கு எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும் சசிகலாவிடம் தான் விளக்கியதாகவும் தேவமணி குறிப்பிட்டார்.
இத்தகைய அனைத்து நடவடிக்கைகளிலும், ஆளும் தேசிய முன்னணி அரசாங்கத்தில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் கட்சியான மஇகா எவ்வாறு தனது பங்களிப்பை வழங்கி வருகிறது, மலேசியாவில் இந்தியர்களை எவ்வாறு அரசியல் ரீதியாகப் பிரதிநிதிக்கிறது, இந்திய சமுதாயத்தை முன்னேற்ற எத்தகைய முயற்சிகளை எடுத்து வருகிறது என்பது போன்ற விவரங்களையும் தான் சசிகலாவிடம் எடுத்துரைத்ததாக தேவமணி கூறினார்.
ஜெயலலிதாவுக்கு மரியாதை
சசிகலாவைச் சந்திக்க வருகை தந்தபோது, கடந்த டிசம்பரில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது புகைப்படத்திற்கு தேவமணி மரியாதை செலுத்தினார்.
சசிகலாவுடன் நடத்திய சந்திப்புக்குப் பின்னர் அவருக்கு நினைவுப் பரிசு ஒன்றையும் தேவமணி வழங்கினார்.
அடுத்து: தேவமணி தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் சந்திப்பு