துபாய் – ப்ளைதுபாய் விமான விபத்தில் பலியான பயணிகள் குடும்பத்துக்கு தலா 20 ஆயிரம் அமெரிக்க டாலர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
துபாயில் இருந்து தெற்கு ரஷியாவில் உள்ள ரோஸ்ட்வ்– ஆன்டான் நகருக்கு, கடந்த சனிக்கிழமை ஃபிளை துபாய் விமானம் 62 பேருடன் புறப்பட்டு சென்றது.
ரஷியாவில் ரோஸ்டவ்–ஆன்டான் விமான நிலையத்தில் தரை இறங்கிய போது மோசமான வானிலை காரணமாக விமான நிலைய ஓடு பாதையில் தரையில் மோதி நொறுங்கி தீப்பிடித்தது. அதில் 2 இந்தியர்கள் உள்பட 62 பேரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த 62 பேரின் குடும்பங்களுக்கு தலா 20 ஆயிரம் அமெரிக்க டாலர் (மலேசிய மதிப்பில் 86,000 ரிங்கிட்) உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த தகவலை ஃபிளை துபாய் விமான நிறுவனம் நேற்று அறிவித்தது.
இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி மிக மிக மோசமாக சேதமடைந்திருப்பதாக ரஷிய விமானத்துறைக் குழு துணைத் தலைவர் செர்ஜி ஷாய்கோ தெரிவித்துள்ளார். இதனால் விமானம் விபத்துக்குள்ளான காரணங்களை குறித்து தெளிவான தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக அவர் கூறினார்.