சென்னை : தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின்னர் துபாய் நகருக்கு ஸ்டாலின் மேற்கொண்டிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் தமிழ் நாட்டில் பலத்த அரசியல் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது.
அவர் தனி விமானத்தில் சென்றது ஏன்? குடும்பத்தினரையும் உடன் கூட்டிச் சென்றது ஏன்? என்பது போன்ற கேள்விகளை அதிமுகவினர் முன்வைத்தனர். இது ஸ்டாலினின் குடும்பச் சுற்றுலா என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வர்ணித்திருக்கிறார்.
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா போல் உள்ளது. தனிப்பட்டக் காரணங்களுக்காக புதிய தொழில் தொடங்க துபாய் சென்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். துபாய் பயணம் தொழில் முதலீட்டை ஈர்க்கவா? அல்லது சுற்றுலாவா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். துபாய் வர்த்தக கண்காட்சி முடியும் தருவாயில் அங்கு சென்றது ஏன்?” என அடுக்கடுக்கான கேள்விகளை எடப்பாடி பழனிசாமி எழுப்பினார்.
இதற்கிடையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், ஸ்டாலின் துபாய் வருகையை முன்னிட்டு கோடிக்கணக்கான பணம் அயல் நாட்டில் கைமாற்றப்படுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து அவர் மீது திமுக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.