Home Featured உலகம் மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது வடகொரியா!

மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது வடகொரியா!

575
0
SHARE
Ad

north koryaபியாங்யாங் – ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா, சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை அவ்வப்போது பரிசோதித்து வருகிறது.

இதுதவிர, அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு ஆணையக் கட்டுப்பாட்டை மீறி, வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் நடந்துகொள்வதால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார்.

இதனால் அந்த நாட்டின் மீது சில தடைகளும் விதிக்கப்பட்டது. இருந்தபோதும், பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி மேலும் பதற்றத்தை உருவாக்கியது வடகொரியா. இதையடுத்து வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க ஐ.நா. பாதுகாப்பு ஆணையம் சமீபத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.

#TamilSchoolmychoice

இந்த தடைகளை எல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா அடுத்தடுத்து கண்டம் விட்டு கண்டம் தாண்டி பாய்ந்துச் செல்லும் அணுஆயுத ஏவுகணைகளை சமீபத்தில் பரிசோதித்தது. இந்நிலையில், மேலும் இரு ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 18-ஆம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 5.55 மணியளவில் ‘ரோடாங்’ ரக ஸ்கட் ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்ததாகவும், 800 கிலோமீட்டர்வரை பாய்ந்துச் சென்று இலக்கை தாக்கிய அந்த ஏவுகணை, ஜப்பானில் உள்ள கிழக்குக் கடல் பகுதியில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், இருபது நிமிடங்கள் கழித்து ஏவப்பட்ட மற்றொரு ஏவுகணை அமெரிக்க ரேடார்களின் கண்களில் மண்ணைத்தூவி மறைந்துவிட்டதாக தெரிகிறது. அந்த இரண்டாம் ஏவுகணை தாக்கிய இலக்கின் தூரம், விழுந்தஇடம் போன்ற தகவல்களை அமெரிக்காவால் கண்டறிய இயலவில்லை.

1300 கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்துச் சென்று தாக்கக்கூடிய வல்லமையுள்ள ‘ரோடாங்’ ஏவுகணைகளால் அண்டைநாடான ஜப்பானை நொடிப்பொழுதில் தாக்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டைநாடுகளுக்கு எரிச்சலூட்டி, வடகிழக்காசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற செயல்களில் இருந்து வடகொரியா விலகி இருக்க வேண்டும் என அமெரிக்க உள்துறை அமைச்சகம் எச்சரித்தது.

ஆனால், இதை எல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா இன்றும் வரிசையாக பல ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று மாலை 3.30 மணியளவில் குறைந்ததூர இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்களை இன்று வடகொரியா பரிசோதித்ததாகவும் அவை ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியில் விழுந்ததாகவும், தென்கொரியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.