பெட்டாலிங் ஜெயா: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க, சில எதிர்க்கட்சித் தலைவர்கள் துபாய் நகரில் சந்தித்து சதியாலோசனை தீட்டியதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2022-இல் பெட்டாலிங் ஜெயா ஷெராட்டான் நகரில் அரங்கேற்றப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு ‘ஷெராட்டன் நகர்வு’ என வர்ணிக்கப்பட்டதைப் போன்று இந்த சந்திப்பு “துபாய் நகர்வு” என ஊடகங்களால் வர்ணிக்கப்படுகிறது.
எனினும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த தாசெக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல் வான் ஜான் இந்த வதந்தியை மறுத்ததோடு, ஒற்றுமை அரசாங்கம் ஒற்றுமையாக இருந்தால், அது போன்ற எந்த நடவடிக்கையும் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று கூறினார்.
“ஆனால் ஒற்றுமை அரசாங்கத்தின் சொந்த திருமணம் சிதைந்தால், அன்வார் தெளிவாக தனது சொந்த வீட்டைக் கவனிக்க முடியாத ஒருவர் என்பது உறுதியாகிறது. தனது நிர்வாகம் எவ்வாறு சிதைந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, அன்வார் தனது நிருவாகத்திற்கான தெளிவான பார்வையை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்றும் வான் சைபுல் கூறினார்.
“பின்கதவு” வழியாக புதிய அரசாங்கத்தை அமைப்பது, தூண்டுதல்கள் மூலம் எதிர்க்கட்சிக்கு ஆதரவை மாற்றக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண்பது, இவற்றைக் கையாளக் கூடிய பொறுப்பான “ஏஜெண்டுகளுக்கு” குறிப்பிட்ட பணிகளை ஒதுக்கவும் துபாய் கூட்டம் நடந்தது” என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.