புதுடெல்லி – தேசிய கீதத்தை அவமதித்ததாக கூறி பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீது டெல்லி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தேசிய கீதத்தை பாடினார். இந்நிலையில், 52 நொடியில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் விதிமுறைகளுக்கு மாறாக, 1 நிமிடம் 22 நொடிகள் பாடியதாக அமிதாப் பச்சன் மீது டெல்லியில் உள்ள அசோக் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் போட்டிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவும், தேசிய கீதம் பாடவும் 4 கோடி ரூபாயை அமிதாப் பச்சன் பெற்றதாக சர்ச்சை எழுந்த நிலையில், தேசிய கீதத்தை அவமதித்ததாக அவர் மீது தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் இதேபோல், ப்ரோ கபடி போட்டிகளில் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் அமித்தாப் பச்சன் பாடியதாக மும்பையில் உள்ள ஜுஹு காவல் நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.