ஜகார்த்தா – கடத்திச் சென்ற படகையும், 10 பணியாளர்களையும் விடுவிக்க வேண்டுமானால் 1 மில்லியன் அமெரிக்க டாலர் (4 மில்லியன் ரிங்கிட்) வேண்டும் என்று அபு சயாப் இயக்கத்தினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை, மலேசிய எல்லையில் வைத்து, இரண்டு இந்தோனிசியக் கொடி கொண்ட படகுகளை சிறைபிடித்த அபு சயாப், அதில் இருந்து 10 பணியாளர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.
பிரம்மா 12 என்ற படகு மட்டும் மீட்கப்பட்டு தற்போது பிலிப்பைன்ஸ் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், 7,000 டன் நிலக்கரி கொண்ட ஆனந்த் 12 என்ற படகு தற்போது அபு சயாப் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
படகையும், பணியாளர்களையும் விடுவிக்க 1 மில்லியன் அமெரிக்க டாலர் பிணைத்தொகையாகக் கேட்டு படகு உரிமையாளருக்கு இதோடு இரண்டு முறை அபு சயாப் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படம்: நன்றி (The Star)