கோலாலம்பூர் – அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி ராஜினாமா செய்ய வேண்டும் என மலேசிய வழக்கறிஞர் மன்றம் அண்மையில் நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பில் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் செயலாளர் சியா யீ லின் மற்றும் அந்தத் தீர்மானத்தை சமர்ப்பித்த மூன்று வழக்கறிஞர்களும் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
இதனை வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் ஸ்டீவன் திரு (படம்) கண்டித்துள்ளதோடு, இது மன்றத்தின் செயல்பாடுகளில் அத்துமீறி செயல்படுவதற்கு ஒப்பாகும் எனவும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.
1976ஆம் ஆண்டின் வழக்கறிஞர் தொழில் சட்டத்தின் கீழ் அதிகாரபூர்வமாக அமைக்கப்பட்ட வழக்கறிஞர் மன்றம், சட்டத்திற்குட்பட்டு கூட்டம் நடத்துவது, அதில் உறுப்பினர்கள் முன்மொழியும் தீர்மானங்களை நிறைவேற்றுவது போன்ற அதிகாரங்களைக் கொண்டுள்ளது, எனவே, தாங்கள் செய்தது சட்டத்திற்குட்பட்டதே என்றும் ஸ்டீவன் திரு வலியுறுத்தியுள்ளார்.
“எனவே, வழக்கறிஞர் மன்றத்தின் சட்டபூர்வ கடமைகளை போலீசார் மதிக்க வேண்டும். மன்றத்தின் உறுப்பினர்களின் சட்டபூர்வ உரிமைகளில் தலையிடக் கூடாது” என்றும் ஸ்டீவன் திரு நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர்கள் பிரான்சிஸ் பெரைரா, ஆர்.சண்முகம், சார்ல்ஸ் ஹெக்டர் ஆகிய மூவரும் அபாண்டி அலிக்கு எதிரான தீர்மானத்தை வழக்கறிஞர் மன்றக் கூட்டத்தில் கொண்டுவந்த காரணத்திற்காக, கடந்த வியாழக்கிழமை போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். தேசநிந்தனைக் குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.