
கோலாலம்பூர் : மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரும் பிரபல வழக்கறிஞருமான டத்தோ சுலைமான் அப்துல்லா தனது 77-வது வயதில் நேற்று திங்கள்கிழமை (டிசம்பர் 18) மாலை காலமானார்.
சுலைமான் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் செயலாளராகவும் (1993-1995) அதன் தலைவராகவும் (2000-2001) அவர் பணியாற்றியிருக்கிறார்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2021 ஜூன் 29-ஆம் நாள் சுலைமானின் மனைவியும் சுஹாகாம் என்னும் மனித உரிமை ஆணையத்தின் ஆணையர்களில் ஒருவருமான மெஹ்ருன் சிராஜ் காலமானார்.
பிறப்பால் இந்துவான சுலைமான் அப்துல்லா இஸ்லாமியராக மதம் மாறியவர். அவரின் இயற்பெயர் ஸ்ரீனிவாச ஐயர் என்பதாகும். அவரது மூத்த சகோதரர்கள், மலேசியன் ஏர்லைன்ஸ் தலைவராகவும், மைக்கா ஹோல்டிங்ஸ் தலைவராகவும் ஜி.கே. ராம ஐயர் மற்றும் பினாங்கு ஃபிரி ஸ்கூல் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜி.கிருஷ்ண ஐயர் ஆகியோராவர்.
பிரதமரின் இரங்கல்
சுலைமானின் மறைவு குறித்து தற்போது ஜப்பானில் இருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சமூக ஊடகங்களில் தன் இரங்கல் செய்தியைப் பதிவிட்டார்.
“டத்தோ சுலைமான் அப்துல்லா நேற்று காலமானார் என்ற வருத்தமான செய்தி எனக்கு கிடைத்தது. அவர் ஒரு வழக்கறிஞர் மட்டுமல்ல, எனது இருண்ட – கசப்பான – ஆண்டுகளில் என்னுடனும் என் குடும்பத்துடனும் உறுதுணையாக இருந்த நெருங்கிய நண்பரும் கூட. நீதி – மனித உரிமைக் கொள்கைகளில் உறுதியான அவரது நம்பிக்கையையும் மனசாட்சியையும் யாராலும் மறுக்க முடியாது. அவரது இழப்பை ஏற்றுக் கொள்ளும் மனவலிமையை அவரின் குடும்பம் பெறவும், அன்னாரின் ஆன்மாவுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் முன்னிலையில் ஒரு சிறப்பு இடம் வழங்கப்படவும் பிரார்த்திக்கிறேன்” என அன்வார் தன் பதிவில் குறிப்பிட்டார்.