மீட்புக் குழுக்கள் கடுமையான குளிர் காலமான இந்த சமயத்தில் உயிர் பிழைத்தவர்களை காப்பாற்ற தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில், சீனாவின் மிக மோசமான நிலநடுக்கம், திங்கள்கிழமை இரவு (டிசம்பர் 18) கன்சு மாநிலத்தை உலுக்கியது. வீடுகள், சாலைகளை சேதப்படுத்தியது. இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைத் தேட மீட்புப் பணியாளர்கள் விரைந்தனர். அதே நேரத்தில் குடியிருப்பாளர்கள் கடுமையான குளிர்காலக் குளிரில் இரவு வேளையில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகளில் இருந்து வெளியே வந்தனர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை நிலநடுக்கத்தில் 105 பேர் உயிரிழந்துள்ளனர், 397 பேர் காயமடைந்துள்ளனர். கன்சுவில் 4,700க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
அண்டை மாகாணமான கிங்காயில், 13 பேர் இறந்துள்ளனர் மற்றும் 182 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் 20 பேர் நண்பகல் வரை காணவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலர் தங்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நள்ளிரவுக்கு முன்பாக நிலநடுக்கம் ஏற்பட்டது.
திபெத்திய பீடபூமியின் கிழக்கு விளிம்பில் உள்ள மலைப்பகுதியான கன்சு மற்றும் கிங்காய் இடையேயான எல்லைக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.