Home நாடு டத்தோ சுலைமான் அப்துல்லா நினைவஞ்சலி : சில சுவாரசியமான பின்னணிகள்

டத்தோ சுலைமான் அப்துல்லா நினைவஞ்சலி : சில சுவாரசியமான பின்னணிகள்

328
0
SHARE
Ad
டத்தோ சுலைமான் அப்துல்லா

(பிரபல வழக்கறிஞரும் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான டத்தோ சுலைமான் அப்துல்லா கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 18) தன் 77-வது வயதில் காலமானார். அவர் குறித்த சுவாரசியமான பின்னணிகளை விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

இன்று பிரதமராக இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது இரண்டாவது முறையாக ஓரின உறவு குற்றச்சாட்டு 2009-இல் சுமத்தப்பட்டது. அன்வாரின்  தலைமை வழக்கறிஞராக செயல்பட்டவர் ஜசெக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கர்ப்பால் சிங்.

உயர்நீதிமன்றம் அன்வார் குற்றமற்றவர் என 2012 ஜனவரியில் தீர்ப்பளித்தது. அரசாங்கத் தரப்பு, மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக அந்த வழக்கை முன்னின்று நடத்தியவர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா.

#TamilSchoolmychoice

2014-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அன்வாரின் வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து அன்வார் குற்றவாளிதான் என உறுதி செய்தது. 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும் வழங்கியது.

இறுதி வாய்ப்பாக அன்வார் மேல்முறையீட்டு தீர்ப்புக்கு எதிராக கூட்டரசு நீதிமன்றத்திற்கு (Federal Court) மேல்முறையீடு செய்தார்.

கர்ப்பால் சிங்

கூட்டரசு நீதின்ற விசாரணைக்காக அன்வார் காத்திருந்தபோது, அன்வாரின் தலைமை வழக்கறிஞரான கர்ப்பால் சிங் 29 மார்ச் 2014-இல் கார் விபத்தொன்றில் எதிர்பாராத விதமாக காலமானார். அன்வாரும் அவரின் வழக்கறிஞர்களும் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்தனர்.

கூட்டரசு நீதிமன்றத்தில் அன்வாருக்காக வழக்காடப் போகும் தலைமை வழக்கறிஞர் யார் என பலரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

அன்வாரைத் தற்காத்துப் போராட முன்வந்த
சுலைமான் அப்துல்லா

அன்வாரை கூட்டரசு நீதிமன்றத்தில் தற்காத்து வழக்காடிய வழக்கறிஞர் குழுவுக்கு தலைமை ஏற்று வழி நடத்த அப்போது முன்வந்தவர்தான் டத்தோ சுலைமான் அப்துல்லா.

சட்டத்துறையில் அறிவாற்றல் மிகுந்தவர் என்பதால் மட்டுமல்ல – அரசாங்க அழுத்தத்திற்கும் மிரட்டலுக்கும் பணிந்து போகாத துணிச்சல்காரர் என்பதாலும்தான் – அன்வார் அவரைத் தன் தலைமை வழக்கறிஞராக அப்போது நியமித்தார்.

சுலைமான் அப்துல்லா திறமையாக வாதாடிய போதிலும், கூட்டரசு நீதிமன்றம் அன்வாரின் 5 ஆண்டு கால சிறைத் தண்டனையை 2015-இல் உறுதி செய்தது. அன்வார் சிறையில் இருந்தபோது 2018 பொதுத் தேர்தல் நடைபெற்றதும் – மகாதீர் தலைமையில் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வெற்றி பெற்றதும் – அன்வார் முழுமையான அரச மன்னிப்பு பெற்று – சுதந்திர மனிதனாக சிறையிலிருந்து வெளிவந்ததும் வரலாற்று சம்பவங்கள்.

தனக்காக சட்டப் போராட்டம் நடத்தியவர் சுலைமான் அப்துல்லா என்பதால்தான்  திங்கட்கிழமை (டிசம்பர் 18) தன் 77-வது வயதில் அவர் காலமானபோது, ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் இருந்து விடுத்த இரங்கல் செய்தியில், அன்வார் பின்வருமாறு உருக்கத்துடன் குறிப்பிட்டார்:

“”டத்தோ சுலைமான் அப்துல்லா காலமானார் என்ற வருத்தமான செய்தி எனக்கு கிடைத்தது. அவர் ஒரு வழக்கறிஞர் மட்டுமல்ல, எனது இருண்ட – கசப்பான – ஆண்டுகளில் என்னுடனும் என் குடும்பத்துடனும் உறுதுணையாக இருந்த நெருங்கிய நண்பரும் கூட. நீதி – மனித உரிமைக் கொள்கைகளில் உறுதியான அவரது நம்பிக்கையையும் மனசாட்சியையும் யாராலும் மறுக்க முடியாது”

அன்வாரின் அபிமானத்தைப் பெற்ற சுலைமான் அப்துல்லா சில சுவாரசியமானப் பின்னணிகளைக் கொண்டவர்.

சுலைமான் அப்துல்லா இந்துவாகப் பிறந்தவர்

பினாங்கைச் சேர்ந்த ஒரு பிராமண இந்து குடும்பத்தில் பிறந்த சுலைமான் அப்துல்லாவின் இயற்பெயர் ஜி.ஸ்ரீனிவாச ஐயர் என்பதாகும்.

அவரது மூத்த சகோதரர் ஜி.கிருஷ்ண ஐயர் பினாங்கு ஃபிரி ஸ்கூல்  பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர்.

டான்ஸ்ரீ ராமா ஐயர்

மற்றொரு மூத்த சகோதரரான டான்ஸ்ரீ ஜி.ராமா ஐயர், பல்வேறு அரசாங்கப் பொறுப்புகளை வகித்தவர். மாஸ் என்னும் மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றியவர்.

மஇகா, மைக்கா ஹோல்டிங்ஸ் முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கியபோது அதன் முதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவரும் ராமா ஐயர்தான்.

சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் படித்தவர் சுலைமான் அப்துல்லா. பல்கலைக் கழகத்தில், சக சட்டத்துறை மாணவியான மெஹ்ரூன் சிராஜ் என்வரை வாழ்க்கைத் துணையாக்கி இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்.

மதம் மாறினாலும், பாரம்பரியத்தால் இறுதிவரை சைவம் உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் சுலைமான். அவர் திடகாத்திரமான வழக்கறிஞராக வலம் வந்த நாட்களில் அவரை அடிக்கடி தலைநகர் லெபோ அம்பாங்கில் உள்ள இலட்சுமி விலாஸ் சைவ உணவகத்தில் பார்க்கலாம்.

சுலைமான் மனைவியும் வழக்கறிஞர்

சுலைமான் அப்துல்லாவின் துணைவியார் அமரர் மெஹ்ருன் சிராஜ்

சுலைமான் மனைவி மெஹ்ரூன் சிராஜூம் ஒரு வழக்கறிஞர். சட்டத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மலாயாப்  பல்கலைக் கழகத்திலும், அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்திலும் சட்டத்துறை பேராசிரியராக பணியாற்றியவர்.

வழக்கறிஞராகப் பணியாற்றியபோது ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அமைப்புகளுக்கு ஆலோசகராகவும் பணியாற்றியிருக்கிறார் மெஹ்ரூன். சுஹாகாம் என்னும் மனித உரிமைகளுக்கான ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவராகப் பணியாற்றியவர் மெஹ்ரூன்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் மெஹ்ரூன் காலமானார்.

கணவன் – மனைவி இருவரும்
சட்டத்துறை விரிவுரையாளர்களாக…

1990-ஆம் ஆண்டுகளில் சட்டக் கல்வி முடித்தவர்கள் வழக்கறிஞராவதற்கான, சிஎல்பி (CLP-Certificate in Legal Practice) என்னும் 6 மாத கால பயிற்சித் தேர்வு வகுப்புகளை மலாயாப் பல்கலைக் கழக சட்டத் துறை நடத்தியது.

சுலைமான் அப்துல்லா – மெஹ்ருன் சிராஜ்

அந்த வகுப்புகளில் சேர்ந்து நான் படித்தபோது சில பாடங்களுக்கு மெஹ்ரூன் சிராஜ் விரிவுரையாளராக வகுப்பெடுத்தார். சில பாடங்களை அனுபவம் மிக்க வழக்கறிஞர் என்ற முறையில் சுலைமான் அப்துல்லா விரிவுரையாளராகப் பாடம் நடத்தினார். கணவன் மனைவி இருவருமே சிறந்த சட்டத்துறை வல்லுநர்கள். அவர்கள் சிறப்பாகப் பாடம் நடத்திய அந்தக் காட்சிகள் இப்போதும் என் நினைவுகளில் நிழலாடுகின்றன.

பிரபல வழக்குகளுக்காக வாதாடிய சுலைமான்

சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டத்துறை பட்டம் பெற்று மலேசியா திரும்பிய சுலைமான், ஷெர்ன் டெலாமோர் வழக்கறிஞர் நிறுவனத்தில் (பிற்காலத்தில் நீதிபதியான) வழக்கறிஞர் மகாதேவ் ஷங்கரிடம் 9 மாதங்கள் பயிற்சி வழக்கறிஞராகப் பணிபுரிந்து பின்னர் வழக்கறிஞரானார்.

சுலைமான் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் செயலாளராகவும் (1993-1995) அதன் தலைவராகவும் (2000-2001) பணியாற்றியிருக்கிறார்.

1998-இல் அன்வாருக்கு எதிராக சுமத்தப்பட்ட வழக்குகளிலும் அவரைப் பிரதிநிதித்தார் சுலைமான்.

முன்னாள் மந்திரி பெசார் முகமட் நிசார் ஜமாலுதீன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பேராக் அரசியலமைப்பு சட்ட நெருக்கடி தொடர்பான வழக்குகளிலும் நிசாரைப் பிரதிநிதித்து வழக்காடியவர் சுலைமான்.

2018-இல் நஜிப்புக்கு எதிரான 1எம்டிபி ஊழல் வழக்குகளில் அரசு தரப்பு வழக்கறிஞராக வழக்காடினார் சுலைமான்.

இஸ்லாமிய சமயம் சம்பந்தப்பட்ட வழக்குகளையும் சுலைமான் கையாண்டிருக்கிறார்.

ஆழ்ந்த இஸ்லாமியக் கல்வியறிவு கொண்டவர் சுலைமான். அவர் நடத்திய வகுப்புகளில் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை விளக்கிய வேளையில், மற்ற மதங்களின் சிறப்புகளோடும் அழகாக ஒப்புவமையோடு பாடம் நடத்தியவர் அவர் என அவரின் வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஒருமுறை அவர் வகுப்பில் படித்த இந்திய மாணவியின் பெயரைக் கேட்டிருக்கிறார் சுலைமான். அந்த மாணவியும் தன் பெயர் சரஸ்வதி எனக் கூற, “சரஸ்வதி என்ற பெயரின் அர்த்தம் உனக்குத் தெரியுமா? கல்விக்கு கடவுளாகப் போற்றப்படுபவரின் பெயரைக் கொண்டிருக்கிறாய்” என விளக்கம் தந்தாராம் சுலைமான்.

நாடகத்துறையில் ஈடுபட்டிருக்கும்
சுலைமானின் மகன்

சுலைமான் அப்துல்லாவின் மகன் ஹூசிர் சுலைமான்…

பெற்றோர்கள் இருவரும் சட்டத்துறை பேராசிரியர்களாக இருந்தாலும், சுலைமானின் மகன் ஹூசிர் சுலைமான் நாடகத் துறையிலும், கலைத் துறையிலும் ஈடுபாடு கொண்டவராவார். பல மேடை நாடகங்களை நடத்தியிருக்கிறார்.

தற்போது சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் நாடக, கலைத் துறை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார் ஹூசிர். இவரின் நாடகங்கள் ஜெர்மன், ஜப்பான், போலந்து, இந்தோனிசியா, சீன மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இவரின் விமர்சனங்களும் பன்னாட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இத்தகைய சுவாரசியமான பின்னணிகளைக் கொண்ட – நாட்டில் மனித உரிமைகளுக்காகவும் – அரசாங்கத்திற்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் போராடிய – சுலைமான் அப்துல்லாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

-இரா.முத்தரசன்